‘கர்ணனின் கவசம், சகுனியின் தாயம்’ என்ற இரு நாவல்கள் மூலம், அறியப்பட்டவர், கே.என்.சிவராமன். ‘தினகரன்’ நாளிதழின் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியரான அவர் எழுதி, ‘சூரியன் பதிப்பகம்’ விரைவில் வெளியிட உள்ள, ‘மாபியா ராணிகள்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்: எந்த நொடியில், ‘‘கங்கு என் தங்கச்சிடா...’’ என்று கரீம் லாலா கர்ஜித்தாரோ, அந்த வினாடியில், காமாத்திபுராவின் தலையெழுத்தே மாறிப் போனது. எலும்புகள் அனைத்தும் உடைபட்ட நிலையில், உயிருள்ள பிணமாக விழுந்து கிடந்த சவுகத் கானை, வந்த நால்வரும் தூக்கிக் கொண்டார்கள். வாக்கிங் ஸ்டிக்குடன் கரீம் லாலா முன்னால் நடக்க, அவர்கள் பின்தொடர்ந்தார்கள்.
ஷீலாவின் வீட்டு வாசலில் அவரது அம்பாசிடர் கார் நின்றிருந்தது. கரீம் லாலா வருவதைப் பார்த்ததும், மரியாதையுடன் கார் கதவை டிரைவர் திறந்தான். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவர், கதவை அறைந்து மூடினார். ‘‘நீ போ...’’ அடிக்குரலில் கட்டளையிட்டார். தவறு செய்துவிட்டோமோ என்று பயத்துடன் அவரைப் பார்த்த டிரைவருக்கு ஏதோ புரிந்தது. ‘சரி’ என்பது போல் தலையசைத்து வணங்கினான். ஓடிச்சென்று தன் சீட்டில் அமர்ந்தான். காரை கிளப்பினான். பறந்தான்.
வாக்கிங் ஸ்டிக்கை தரையில் ஊன்றாமல் காற்றில் வீசியபடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கரீம் லாலா நடக்க ஆரம்பித்தார். சவுகத் கானை சுமந்து வந்த அடியாட்களும் மவுனமாக அவரை பின்தொடர்ந்தார்கள்.
அந்த நள்ளிரவிலும் மொத்த காமாத்திபுராவும் கண்கொட்டாமல் இந்தக் காட்சியை வேடிக்கைப் பார்த்தது. வாடிக்கையாளர்கள், மாமா பயல்கள், நேற்று லைனுக்கு வந்தவர்கள், லைனிலேயே இருப்பவர்கள், வயது காரணமாக ஓய்வு பெற்றவர்கள், நடைபாதை வாசிகள்... என ஒருவர் பாக்கியில்லாமல் சகலரும் சாலையோரம் நின்றிருந்தார்கள்.
சவ ஊர்வலம்.
அப்படித்தான் அவர்கள் அனைவருக்கும் தெரிந்தது. தெரிய வேண்டும் என்பதற்காகவே சின்ன சந்து கூட விடாமல் காமாத்திபுராவின் மூலை முடுக்கெல்லாம் கரீம் லாலா நடந்தார். மாடியில் நின்றபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கு. வெந்து தணிந்த உடலை, கிழிந்த போர்வை மூடியிருந்தது. அடிவயிற்றில் இருந்து பொங்கிய உணர்வை, உணர்ச்சியை அவள் அடக்கவேயில்லை. அடக்கவும் விரும்பவில்லை. கண்கள் வழியே அவைகள் வழிந்து தன் கன்னத்தை நிரப்பட்டும் என விட்டுவிட்டாள்.
உடன் பிறந்த சகோதரர்கள் செய்யாதது; இந்த உலகுக்கு, தான் வர காரணமாக இருந்த தகப்பன் கனவிலும் செய்யத் துணியாதது;
நல்லவர்கள், புனிதர்கள், கடவுளின் அவதூதர்கள் என ஒழுக்கவாதிகளாக பெயரெடுத்த ஒருவரும் தன் வாழ்நாளில் செய்ய முற்படாதது...
ஆனால், கரீம் லாலா செய்திருக்கிறார். அவளுக்காக. அவளது வேண்டுகோளுக்காக. உடலை விற்று பிழைப்பவளுக்கும் சுய மரியாதை உண்டு என்பதை அந்த கடத்தல்காரர்தான், தெற்கு பம்பாயின் தாதா தான் உணர்ந்திருக்கிறார். அவளது கவுரவத்தை காப்பாற்ற தனது வலது கையையே அடித்து நொறுக்கியிருக்கிறார்.
இனி யாரும் அவளது உடலை அவள் அனுமதியில்லாமல் தொடக் கூடாது என்று எச்சரிப்பதற்காக இதுவரை வந்திராத ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதிக்கு வந்திருக்கிறார். ஓர் இடம் பாக்கி இல்லாமல் தன் பாதம் படும்படி நடந்து கொண்டிருக்கிறார்...
இருந்த இடத்தில் நின்றபடியே கையெடுத்து அவரை கும்பிட்டாள். இனம் புரியாத உணர்வுடன் தன் அறைக்கு வந்தவள், அப்படியே படுக்கையில் விழுந்தாள்.
எப்போது உறங்கினாள் என்று தெரியாது. ஆனால், கண்விழித்தபோது உலகமே மாறியிருந்தது.
அங்கிருக்கும் வயதான கிழவிக்கு அவளை பிடிக்காது. முன்னாள் பாலியல் தொழிலாளியான அந்த கிழவி, அவளை பார்க்கும் போதெல்லாம் எரிந்து விழுவாள். கண்களை உருட்டி உருட்டி எரிப்பாள். இந்தியில் இருக்கும் சகல கெட்ட வார்த்தைகளாலும் அவளை திட்டுவாள்.
அப்படிப்பட்ட கிழவி, உறங்கி எழுந்து வந்த அவளைப் பார்த்து முதல்முறையாக புன்னகைத்தாள். பல் தேய்க்கவும், முகம் கழுவவும் தன் கையால் பணிவிடை செய்தாள். வேறு ஏதேனும் வேண்டுமா என பவ்யமாக கேட்டாள்.
அந்த கிழவி என்றில்லை. மொத்த காமாத்திபுராவுமே அப்படித்தான் அவளிடம் பயம் கலந்த மரியாதையுடன் நடந்து கொண்டது.
கங்குவுக்கு சிரிப்பு வந்தது. ஷீலாவை பார்க்கவோ பாவமாக இருந்தது. இனி அந்த வீட்டின் ‘அக்கா’, தான் அல்ல என்பதை உணர்ந்தவள் போல் ஷீலா கை கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தாள்.
என்ன பேசினாலும் இவள் பதற்றம் குறையாது. செய்கைதான் ஆறுதல் படுத்தும். எனவே ஷீலாவை கட்டிப் பிடித்தாள். ‘‘அரைமணி நேரத்துல தயாராகிடறேன்கா. அதுக்கு அப்புறம் கஸ்டமரை அனுப்பு...’’ என்று சொல்லிவிட்டு சென்றாள்.
ஷீலா இறக்கும் வரை கங்கு இப்படித் தான் நடந்து கொண்டாள். ஒருபோதும் இவளைத் தாண்டிச் செல்ல முயலவில்லை. இந்தத் திருப்தி தந்த நிறைவினாலோ என்னவோ அடுத்த மூன்று ஆண்டுகளில் ஷீலா மறைந்தாள்.
அதன் பிறகு கங்குவை தேடி ‘கார்வாலி’ பதவி வந்தது.
காமாத்திபுராவில் ஏகப்பட்ட அடுக்குமாடிகள் கொண்ட வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீடும் பல தளங்களை கொண்டது.
ஒவ்வொரு தளத்திலும் குறைந்தது ஐம்பது படுக்கைகள் கொண்ட தனித்தனி தடுப்புகள் இருக்கும். அதாவது ஐம்பது முதல் அறுபது பெண்கள் வரை ஒரு தளத்தில் இருப்பார்கள். இந்தப் பெண்களையும், ஐம்பது படுக்கைகளை கொண்ட அந்த தளத்தையும் எந்த பெண்
நிர்வகிக்கிறாளோ அவள்தான் ‘கார்வாலி’.
இப்படி ஒரு அடுக்குமாடி வீட்டில் எத்தனை தளங்கள் இருக்கிறதோ அத்தனை ‘கார்வாலி’கள் இருப்பார்கள். இந்த ‘கார்வாலி’கள் அனைவருக்கும் தலைவியாக ‘படே கார்வாலி’ இருப்பார். இவரது கட்டுப்பாட்டில்தான் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வீடு இருக்கும்.
அதாவது ‘கார்வாலி’கள் ராணி என்றால், ‘படே கார்வாலி’ மகாராணி.
இந்த ‘படே கார்வாலி’யும் நியமிக்கப்படுவதில்லை. தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
இவர்களுக்கான தேர்தல் எப்படி நடக்கிறது, யார் தலைமையில் நடைபெறுகிறது என்பதெல்லாம் ரகசியம். ஆனால், ‘படே கார்வாலி’களுக்கு என்று ஒரு சங்கமும், அந்த சங்கத்தை பம்பாய் (மும்பை) நிழலுலக தாதாக்கள் வழிநடத்துவதும் நிஜம்.
சுருக்கமாக சொல்வதென்றால், காமாத்திபுரா என்பது வெறும் சிவப்பு விளக்கு பகுதி அல்ல. அது ஒரு ராஜ்ஜியம். அவர்களுக்கு என்று தனி அரசாங்கம், அரசமைப்பு உண்டு. பம்பாயிலேயே அந்தப் பகுதி இருந்தாலும் மஹாராஷ்டிர மாநிலத்தின் சட்டதிட்டங்கள் அதற்கு பொருந்தாது.
இந்த தனி ராஜ்ஜியத்தின் ‘கார்வாலி’யாகத்தான் தேர்தல் மூலம் கங்கு தேர்ந்தெடுக்கப் பட்டாள். பம்பாயே நடுங்க ஆரம்பித்தது.
காரணம், அப்போது இந்தியப் பிரதமராக இருந்த பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அவளைப் பார்க்க விரும்பியதுதான்.
சூரியன் பதிப்பகம்