‘மெமோய்ர்ஸ்’ என்ற இலக்கிய வகைப்பாடு, தமிழுக்குப் புதியதில்லை என்ற முன்னுரையோடு (தன்னுரை) கதைக் கூறத் துவங்குகிறார் குணா. ஐந்து வயது சிறுவன் தான், நாவலின் தலைவன். அவனுடைய பத்து வயது வரையிலான வாழ்க்கைச் சூழலை, அந்தச் சிறுவனின் உலகத்திலிருந்து, அவனுடைய பார்வையிலேயே சொல்வது தான் இந்த நாவல்.
ஏற்கனவே இந்தப் பகுதியில், ரத்த உறவு, சூரிய வம்சம், கூளமாதாரி, வெலிங்டன் போன்ற நாவல்களை நூலாசிரியர், பட்டியலிடுகிறார்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை, கோணங்கியின் மதனிமார்களின் கதையை நினைவில் கொள்ளும்போது, ஒரு நிலத்தின் மதனிகள், மற்றொரு நிலத்தின் அக்காமார்கள் ஆகிப்போன ரஸவாதமாக, இந்த வாசிப்பை எடுத்துக் கொள்ள முடிகிறது.
ஏற்கனவே, குணா கந்தசாமியின் சிறுகதைத் தொகுப்பான, ‘திரிவேணியில் வரும் கைக்கிளையின் சிலுவை’ எனும் சிறுகதையின் நீட்சியாக அல்லது கடைசிப் பகுதியாக, இந்த நாவலை கவனிக்க முடிகிறது. நிலக்காட்சி, கதை மாந்தர்கள், கதாபாத்திரத்தின் மனநிலை என, ஒரே சீதோஷ்ணத்தை உணர முடிகிறது.
அந்த வகையில், தீவிர இலக்கிய உலகில் திரிவேணிக்குக் கிடைத்த இடத்திலிருந்து, ‘உலகில் ஒருவன்’, அடர்த்தி குறைந்த படைப்பாகப் பார்க்கப்படுவதற்கான வெளியை, நாவலின் வடிவமே ஏற்படுத்திக் கொள்கிறது. சிறுவனின் பார்வையில் கிடைக்காத விளக்கங்கள், புரிந்துகொள்ள முடியாத தருணங்கள், தெரிந்துகொள்ள முடியாத, அனுமதி கிடைக்காத விஷயங்கள் யாவும், அங்கங்கே
விடப்பட்டிருக்கின்றன.
இது, விமர்சனத்தை உருவாக்கும் இடம்; ஆசிரியர் நினைத்திருந்தால், தவிர்த்திருக்க இயலும் தான். அதேநேரம், கதையில் வேறு சில அம்சங்களை, குறிப்பாக, சிறுவனின் ஜாதியைத் தெரியவிடாது மெனக்கெட்டிருப்பதை, அவன் குடும்பத்தில் உள்ளோரின் பெயர்களை மறைத்தமை, ஆசிரியரின் தீர்மானத்தையும், நம்பிக்கையினையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது அந்தச் சிறுவனின் குடும்பத்திலிருப்போரின் பெயர்களை நமக்கு சொல்லாமல் போனதிலிருந்து, மெய்மையிலிருந்து விலகாத படைப்பாகத் தான் இருக்க வேண்டும் என்று குணா முடிவு செய்திருப்பதை உணர முடிகிறது.
பல இடங்களில், குணா நிரப்ப வேண்டிய பத்திகள் நிரப்பாமல் காலியாக இருப்பதை உணர முடிகிறது. ‘சொல்லப்படாமல் விட்டவைகளால் சொல்லப்பட்ட கதை’ என, மிக நேர்த்தியான நாவல் கட்டமைப்பில் அவர் தன் முன்னுரையில் சொல்வதால், அந்தச் சிறுவன் வானத்தைப் பார்ப்பதோடு முடித்து விடுகிறார். பெரியவர்களுக்கான குழந்தைகளைப் பற்றிய இலக்கியம் என்று, குழந்தைகளின் உலகம் வழியாக பயணித்ததில், மிக முக்கியமான படைப்பாக இதைக் கருத முடியும்.
முழுக்க முழுக்க, அவனது மூன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரையிலான காலக்கட்டம், அந்தச் சிறுவனின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனாலேயே அது நமக்கு நெருக்கமாகி விடுகிறது. மிகச் சிறப்பாகவே சின்னச் சின்ன விஷயங்களையும் கையாண்டிருக்கிறார்.
அதுபோக, கொங்கு வட்டாரம் என்றாலும் சற்றே வறண்ட பகுதியான தாராபுரத்தை ஒட்டிய மக்களின் பேச்சு வழக்கு கொண்ட அவர்கள் வாழ்வியல் பதிவாக, இக்கதைக் களத்தை பயன்படுத்தி அவர் பதிந்திருப்பது, குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். குணா கந்தசாமியின் குறுநாவல் ‘உலகில் ஒருவன்’ ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்த, ஒரு சிறுவனின் பால்யத்தை ஒரு இடம், மொழி என்று வரையறுத்தும், பொதுமைப்படுத்திப் பார்த்தும், வேறொரு நிலத்தில் பிறந்த ஒருவனோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும் படைப்பாகவும் இருக்கிறது என்பதில், எனக்கு ஐயமில்லை.
கட்டுரையாளர் – ‘கணையாழி’ துணை ஆசிரியர்