‘அழுக்கு சட்டையைத் துவைத்துப் போடுவதால் புரட்சி தாமதப்படும் என்றால் பரவாயில்லை. ஆடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார், பொதுவுடைமைவாதி வி.பி.சிந்தன். கொள்கைத் தீவிரத்தில் அழகியலுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அழகியல், வாழ்வின் சிறப்பான பகுதி என்பதைத் தான் அவர் குறிப்பிட்டார். பிரசாரக் கதை எழுதும்போது, கொள்கை சில இடங்களில் சங்கடமாகவும், சில இடங்களில் சவுகரியமாகவும் இருக்கிறது.
கதை எந்த அளவுக்கு இருக்க வேண்டும்; கட்டுரை எந்த அளவுக்கு இருக்க வேண்டும்; கலவையில் எது தூக்கலாக இருக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னை தான். தன் தரப்பின் நியாயத்தை படைப்பாக்கி வெளியிடும்போது, கலை உணர்வு காயப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பனை ‘ஓவராகி’ விடும்.
அரவிந்தன் நீலகண்டன் கொடுத்துள்ள, ‘ஹிந்துத்துவ சிறுகதைகள்’ ஒரு நல்ல முயற்சி. இது, ‘பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு’ என்கிறது, புத்தகத்தின் பின்அட்டை. முயற்சி முழு வெற்றி தான். இந்தக் கதைகள், பிரசாரக் கதைகள் என்று சொல்லாமல் விட்டிருந்தாலும், தலைப்பை வேறுவிதமாக வைத்திருந்தாலும்,
வாசகர்களிடையே நிச்சயமாக வரவேற்பு கிடைக்கும்.
ஒரு கதையில், வைணவப் பரிபாஷையில் எழுதப்பட்ட கல்வெட்டு, கதாநாயகனாக இருக்கிறது. இதுவும், நாட்டுப் புறப்பாடல் சாட்சிக்கு வரும், ‘சுமைதாங்கி’ என்ற கதையும், தமிழ்ப் புனைவுலகின் புதிய யுக்திகள். நையாண்டி தவறாத நடை அரவிந்தனுடையது. அதிலிருந்து இரண்டு உங்களுக்காக...
எதிரில் இருந்த மேசையில், புனித சவேரியார் கருப்பு அங்கியுடன், சிலுவையை உயரத் தூக்கிப் பிடித்தபடி, தன் கச்சித வடிவமைப்பில் தன்னை சீனத் தயாரிப்பு என, தெரிவித்துக் கொண்டிருக்கிறார் (பக்.79).
ஏதோ ஒரு காலத்தில் குளமாக இருந்து, அண்ணா பேருந்து நிலையமான பிறகும், குளத்து பஸ் ஸ்டாண்டாகவே அழைக்கப்பட்டது அது.
அவள் இடுப்பின் பச்சைப் பை முடிச்சிலிருந்து திருநீற்றை எடுத்து, ‘என்னைப் பெத்த சிவனே’ என்று நெற்றியில் இட்டாள். அதை இடும்போதெல்லாம் ஏனோ, அவள் இளம்பிராயத்தில் பார்த்த திரைப்படத்தில், சிவாஜி கணேசன் சிவபெருமானாக, ‘அந்த சிவந்தானே நம்மள இந்தப் பாடுபடுத்துறான்’ என்று சொல்வது நினைவாக வரும் (பக்.121).
சுப்பு