கடந்த, ஜூலை, 25ம் தேதி மறைந்த, வ.உ.சி.,யின் கடைசி மகன் வாலேஸ்வரனின் நினைவைப் போற்றும் நூல் இது. கடந்த, 1928 ஜூலை 11ம் தேதி பிறந்த வாலேஸ்வரன், பள்ளி படிப்பில், தங்கப் பதக்கத்துடன் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். ஆனால் கல்லூரி படிப்பை தொடர முடியாதபடி, குடும்பச் சூழல் வறியதாக இருந்தது. எனவே, பல இடங்களில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவராக இருந்தார்.
கடந்த, 1946ல், அரசு தேர்வாணையத் தேர்வில் தேறி, அரசு பணியில் சேர்ந்தார். மூன்று மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி. பின்பு வணிகவரி துறையில் பணி. அது அவர் இயல்புக்கு ஏற்றதாக இல்லை. எனவே தொழிலாளர் நலத்துறைக்கு விரும்பி மாற்றல் பெற்றார். அந்த துறையில் பதவி உயர்வு பெற்று, துணை கமிஷனராக ஓய்வு பெற்றார்.
வ.உ.சி., எழுதிய, சிவஞான போத உரை நூல் வெளியீட்டு விழா, 2008ல் நடந்தது. அதில், நூல் வெளியீட்டிற்காக, 3,000 ரூபாயை அன்பளிப்பாக, வாலேஸ்வரன் அளித்தார். விழா குழுவினர், அவருக்கு ஒரு அன்பளிப்பு வழங்கினர். ‘அதில் என்ன இருக்கிறது’ என்று அவர் கேட்டார். 2,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி குத்துவிளக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ‘10, 20 ரூபாய் மதிப்புள்ள நல்ல புத்தகங்கள் கொடுத்தால் பரவாயில்லை. 2,000, 3,000 ரூபாய் மதிப்புள்ள பொருளை பெற்று சென்றால் அது லஞ்சம்’ என்று கூறி,
அதை அங்கேயே, அப்போதே திருப்பி கொடுத்துவிட்டார்.
இங்கே கேட்டதால் சொன்னோம். திருப்பி கொடுத்து விட்டீர்கள். மாறாக வீட்டிற்கு கொண்டுபோன பின் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்’ என, இந்த நூலாசிரியர் செ.திவான் கேட்க, ‘கூரியரில் திருப்பி அனுப்பி இருப்பேன்’ என, பட்டென பதில் வந்தது.
நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டால் உரிய நேரத்திற்கு வந்துவிடும் வாலேஸ்வரன், அழைப்பாளர்களுக்கு எந்த செலவும் வைக்கமாட்டார்.
நெல்லை வ.உ.சி., மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு, அரசு வாகனத்தில் வாலேஸ்வரனை அழைத்து சென்று திரும்ப விடுவதாக கூறியும் மறுத்து விட்டு, சொந்த செலவில், பேருந்தில் சென்றவர் அவர். தியாகம், நேர்மை, தூய்மை என்றால் என்ன, இந்த காலத்தில் அப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று கேள்வி கேட்போர் படிக்க வேண்டிய நூல் இது.
திருநின்றவூர் ரவிக்குமார்