இந்தியாவின், அரசியல், சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்களில், ஜி.சுப்பிரமணிய ஐயரின் பணி குறித்து இந்த நூல் விளக்குகிறது. திருவையாற்றில், 1855ம் ஆண்டு பிறந்தார் ஐயர். 1878ல் ‘இந்து’ நாளிதழ், 1882ல் ‘சுதேசமித்திரன்’ நாளிதழ்களை அவர் தோற்றுவித்தார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழ்ப் பேரறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு, அந்த பணியில், ஐயர் உதவி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்காக காந்தி நடத்திய அறப்போராட்டச் செய்திகளையும், வ.உ.சி.,யின் கப்பல் கம்பெனி குறித்தும், சுதேசமித்திரன் இதழில் வெளியிட்டதற்காக, 1908ல் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 1915ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சென்னை வந்த காந்தியை ஐயர் சந்தித்தார். அப்போது நோயுற்றிருந்த ஐயர், காந்தியிடம், ‘சக்தியற்றவனாகப் போய் விட்டேன். என்னால் நாட்டிற்கு என்ன பயன்’ என்று கண்ணீர் மல்க கூறினார். காந்தி, தமது துண்டால் அவரது
கண்ணீரை துடைத்து விட்டார் (பக். 79).
கடந்த, 1887ல் சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், கும்பகோணம் மூக்கன் ஆசாரி என்பவர் தமிழில் பேசினார்; அதுவே காங்கிரசில் ஒலித்த முதல் தமிழ்க்குரல் (பக். 97), ‘ஒரு பைசா தமிழன்’ இதழ் நடத்திய, பண்டித சு.அயோத்திதாசர், ஐயரின் தமிழ்த் தொண்டை பாராட்டி உள்ளார் (பக். 160), சீர்திருத்த மனப்பான்மை கொண்ட ஐயர், தம் மகள் சிவப்பிரியாம்பாள் திருமணமான இரண்டாம் ஆண்டே விதவையாகிவிட, அவருக்கு மிக்க துணிச்சலுடன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தார் (பக். 163), என்பன போன்ற செய்திகள், புதுமையானவை.
கூட்டுக் குடும்ப அமைப்பை ஐயர் எதிர்த்தார். ‘ஜாதி என்பதை மூலவராகக் கொண்டால், கூட்டுக் குடும்பம் என்பது உற்சவமூர்த்தி. இது அழிவு வேலையை மிகத் திறமையாகச் செய்கிறது’ என்று, ஐயர் தாக்கி பேசினார். ஐயர் குறித்து வ.உ.சி., எழுதிய வெண்பாக்கள், நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. சீர்திருத்தம் வேண்டுவோரும், அரசியல் சாக்கடையை வெறுப்போரும் படிக்க வேண்டிய நூல் இது.
டாக்டர் கலியன் சம்பத்து