தற்போது, எஸ்.ஆர்.எம்., சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பாலாஜியின், ஏழு சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் தளர வேண்டாம் என்பதைச் சொல்லும், ‘தன்னம்பிக்கை’; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைச் சொல்லும், ‘தாகம்’; மனம் விட்டுப் பேசுங்கள், பகைமை உணர்ச்சி வேண்டாம் என்று விளக்கும், ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’; ஆடம்பரச் செலவு அவசியம் அற்றது என்று சுட்டிக் காட்டும், ‘ராயல் படேல்’ போன்ற கதைகள், தம்முள் ஒரு கருத்தை வைத்துள்ளன.
‘அர்த்தநாரீஸ்வரம்’ சற்று நீளமான கதை. ‘பெண் பாவம் பொல்லாதது’ தொட்டுவிட்ட பெண்களைப் புறக்கணிக்காமல், வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நீதியைச் சொல்லும் குறுநாவல்.
ஜனரஞ்சகமான இந்தக் கதைகள், சரளமான நடையில், வாசகர்களைக் கவரும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளன. உரையாடல்கள் வெகு இயல்பாக அமைந்துள்ளன. கூடு விட்டுக் கூடு பாய்ந்து, அந்த அந்தப் பாத்திரங்களாகவே மாறி, ஆசிரியர் எழுதிச் செல்வது ஒரு தனிச்சிறப்பு.
எஸ்.குரு