பதினோரு சிறுகதைகள் உள்ள இந்தத் தொகுதியில், பல கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. ‘நீ யாதுமாகி நின்றாய் ரமணா’ என்ற கதை முதலிடம் பெறுகிறது. காதல் மனைவியின் கல்வி ஆர்வத்தை மதித்து, அவள் மேற்படிப்பு ஆசை நிறைவேற தாம்பத்ய சுகத்தையே தள்ளி வைக்கிறான், கதையின் நாயகன் ரமணன்.
பெண் சிசுக் கொலைக்கு எதிராகக் குரல் கொடுத்து, பெண் சிசுவின் பெருமையைப் பேசும் கதை, ‘அபாமிப் பாப்பாவும், அபிராமிப் பாட்டியும்!’. ‘பிரம்ம கபாலம்’ மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. அண்ணன், தங்கை என்ற புனிதமான உறவுக்கு, இனம், நாடு, மொழி பேதம் இல்லை என்பதை உணர்த்துகிறது, ‘கீதாஞ்சலி!’ தலைப்புக் கதையான ரெகுராரத்தம்மா ஒரு சிறந்த சிறுகதை. மாடுகளுக்குப் பொங்கலிடுவதைப் போல், மரங்களுக்கும் பொங்கலிட வேண்டும் என்கிறார் ரெகுராரத்தம்மா. பிள்ளையார் கோவிலுக்கு அருகே துர்நாற்றம் எடுத்த இடத்தை, பறவைகள் சரணாலயமாக, மரங்கள் அடர்ந்த சோலையாக மாற்றும் ரெகுராரத்தம்மா, ஒரு மறக்க முடியாத பாத்திரம். இராம் மோகன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.
எஸ்.குரு