குழந்தைகளையும், பெண்களையும் உயிருடன் எரிக்கும் நாடு; கல்வியறிவு இல்லாத, மூடநம்பிக்கைகளும், தவறான பழக்க வழக்கங்களும் புரையோடிய நாடு; வறுமையும், பஞ்சமும், பசியும் தலைவிரித்தாடும் தேசம்; அறிவியல், வரலாறு, சட்டங்கள் எதையும் அறியாத காட்டுமிராண்டி கூட்டம் வாழும் பகுதி; இவை, இந்தியாவை பற்றி ஐரோப்பியர் ஏற்படுத்திய பிம்பங்கள்.
இவை அனைத்தும் அண்டப்புளுகு, பொறாமையின் வெளிப்பாடு என்பதை பாரதத்தில் பிறந்த பலர் நிரூபித்து விட்டனர். இருந்தாலும் இந்த ஆதிக்க மனப்பான்மை தான், இன்று கூட, அவர்களை, ‘ஆயுர்வேதத்திலும், சித்த வைத்தியத்திலும் அறிவியல் இல்லை’ என சொல்ல வைக்கிறது.
ஐரோப்பியரின் கூற்றுக்கள் தவறு என்பதை, அவர்கள் சேகரித்து வெளியிட்ட ஆவணங்கள் மூலமாக நிறுவியோரில், தரம்பால் முக்கியமானவர். ஆங்கிலேயர் வருகைக்கு முன், குறிப்பாக சென்னை மாகாணத்தின், உயர்ந்த படிநிலைகளை உலகிற்கு
உயர்த்திவர். அந்த காந்தியவாதியின் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த நூலை எழுதி உள்ளார் நூலாசிரியர்.
இந்தியாவில், சாதாரண மக்களும் கல்வியறிவு பெற்றிருந்ததையும், பொருளாதாரத்தில் தன்னிறைவுடன் வாழ்ந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். தரம்பால் அளித்த தரவுகளில் இருந்து, தன் வாதத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
தொழில் புரட்சியின் பாதிப்புக்கு முன், இந்திய கிராமங்களில் பொருளாதாரம் தன்னிறைவில் இருந்தது. கல்வி முதல் பொருளாதாரம் வரை, மக்களின் தேவைக்கு குறைவு இல்லாமல் இருந்ததையும் உறுதி செய்ய முடிகிறது. ஆனால், விஷயம் இத்துடன் முடியவில்லை. சமூக நோக்கில் இந்தியாவை பார்க்கும் போது, நெருடல்கள் அதிகம். இந்திய சமூகத்தின், ஜாதி அடிப்படை குறித்த விமர்சனங்களுக்கு பதில் கிடைப்பது சிரமம். மக்கள் ஏற்றம் பெற ஜாதி உதவியதா; இந்த சமூகத்தில், ஏற்றத்தாழ்வுகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தனவா; இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு, ஜாதிய கட்டமைப்புகளுக்கு இடையே, மோதல் அதிகரித்து இருப்பதை ஏற்கலாம். ஆனால், அதன் தொடக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலமா என்றால் இல்லை. ஆங்கிலக் கல்வியும், மக்களாட்சி முறையும் மட்டுமே, ஜாதிய வேறுபாடுகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக, ஐரோப்பிய வரலாற்று அறிஞர்கள் முன் வைக்கும் வாதத்தை மறுக்கவும் இயலாது. ஜாதி பற்றிய விவாதம், ஒரு நீண்ட நெடிய விடை தெரியாத கேள்வி மட்டுமே.
ஜே.பி.,