தமிழகம் அறிந்த பத்திரிகையாளர் ப.திருமலை எழுதிய அரசியல், பொருளாதாரம், தேசிய பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளின் அருமையான தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதியவை இவை. ‘நடுங்க வைக்கும் சீனா; நடுக்கத்தில் நாம்’ என, இந்தியா சார்ந்த சர்வதேச பிரச்னையையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் தானே என்று நினைத்து நாம் படித்தால், அதில் பல சம்பவங்கள் இன்றும் தொடர்வன. இன்னும் தொடர்வன. அது நமது துரதிர்ஷ்டம் தான். ‘இன்னும் நம்புகிறார்கள்’ என்ற கட்டுரையே இதற்கு உதாரணம். மக்களவையிலும், பல்வேறு மாநில சட்டசபைகளிலும் நமது மக்கள் பிரதிநிதிகள் எப்படி பொறுப்பில்லாமல் சண்டையிடுகின்றனர்; சபை நடவடிக்கைகளை அலைக்கழிக்கின்றனர் என விளக்குகிறார். ‘மக்கள் பிரதிநிதிகள் பேசுவதற்கு அல்ல; உடைப்பதற்கே மைக்’ என்கிறார்.
‘அழகிரி – ஸ்டாலின் உரசல்: பலவீனப்படுகிறது கட்சி’ என்ற கட்டுரை உட்பட, 22 முத்தான கட்டுரைகளை படித்து முடிக்கும் போது, நாமும் சொல்லலாம் ‘இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!’
ஜிவிஆர்