கல்கியின் ஆசிரியராக விளங்கிய, சீதா ரவி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இசையையும், மனித மனங்களையும் மிக நுணுக்கமாக அணுகி, அனுபவித்து நூலாசிரியர், கதைகளாக வடித்திருக்கிறார். ஒரு மலர் மலர்ந்து இதழ் விரிப்பதைப் போன்ற வர்ணனைகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.
‘மடியிலிருந்து வீணையை இறக்கி வைத்தாள் கமலம். வாசித்து முடித்த கல்யாணி ராகத்தின் ஒய்யார வளைவுகளும், ஒடுங்கிய முடுக்குகளும், மழை நாளின் குளிர்ச்சியாகச் சூழ்ந்திருந்தன. தியாகேசர் கோவிலில், அவள் நாட்டியம் செய்வதைப் பார்த்திருக்கிறான். நாட்டியமா அது?
தன் அங்கங்களால் அந்த ஈசனுக்கு அவள் நடத்தும் ஆராதனை அல்லவா? கண்களால் காட்டும் கற்பூர ஆரத்தி’. சீதா ரவி ஒரு கலை உபாசகர். அது, அவரது கதைகளில் வரிக்கு வரி வெளிப்படுகிறது. இந்தக் கதைகள், உங்களை இசை உலகிற்கு சிறகு முளைக்க வைத்து பறக்க வைக்கும். இசையின் ஆழம், நீளம், அகலங்களை அளக்க வைக்கும்.
கதைகளைப் படித்து முடித்ததும், ஒரு அருமையான இசைக் கச்சேரியைக் கேட்கும் அனுபவம், சித்திக்கும்.
எஸ்.குரு