கடந்த, 1754 முதல், 1794 வரை, 40 ஆண்டுகளே வாழ்ந்தாலும், தன் கல்விக் கொடைத் தருமத்தால், தன் சொத்துக்கள் முழுவதும் தந்த புண்ணியத்தால், 200 ஆண்டுகளாய் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர், பச்சையப்ப முதலியார்.
கோமளீசுவரன்பேட்டை சீனிவாசப் பிள்ளை, ஆங்கிலத்தில் எழுதிய நூல், 100 ஆண்டுகளுக்குப் பின் மீள்பதிப்பாக, தமிழில் வந்திருப்பது, தமிழ் கூறும் நல்லுலகம் செய்த தவப்பயன்.
வள்ளல் பச்சையப்பர் பற்றி, அறிஞர் மு.வரதராசனார் எழுதியுள்ள வரலாற்று முன்னுரை, நூலின் முகப்பில் நின்று, பன்னீர் தூவி வரவேற்கிறது. தென்றல் தவழும் அவரது தமிழ்நடையில் பச்சையப்பர் வாழ்வும், கொடையும் நம் மனதில் கல்வெட்டாய் பதிகின்றன. கொடை வண்மையால் புகழ்பெற்ற பாரி, காரி, நள்ளி, பேகம், ஓரி, ஆய், குமணன், பண்ணன், அதியமான், சடையப்ப வள்ளல், சீதக்காதிக்குப் பின், 18ம் நூற்றாண்டில் வள்ளல் பச்சையப்பர் பெரும்புகழ் பெற்றதை அவர் விளக்குகிறார்.
சோகமான, வறுமையான சூழலில் வாழ்வு நகர்ந்தாலும், கல்விக்கும், கோவில் அன்னதான தருமங்களுக்கும் அளவின்றித் தந்தார். பெரியபாளையத்தில் தாய் பூச்சியம்மாள் கருவில் உருவான போதே, தந்தை விசுவநாத முதலியார் மறைந்தார்.
தாயுடன் நிராதரவாக சென்னை வந்து, பவுனி நாராயணப் பிள்ளையிடம் வணிகத் தரகர், துவிபாஷி ஆகப் பயிற்சி பெற்று வளர்ந்தார். ஆங்கிலேயர், அரசர்களிடம் வணிகம் செய்து தன் ஆங்கிலம், கணக்கறிவால் பெரும்பொருள் சேர்த்தார். இருமுறை திருமணம் நடந்தது. பெற்ற ஒரு பெண் மகவையும் இழந்து, சொத்து யாவையும் பொதுதர்மத்திற்கே உயில் எழுதி வைத்தார்.
காஞ்சிபுரம், சென்னை, சிதம்பரத்தில், இலவசப் பள்ளிகள் துவக்கினார். கோவில்களிலும், மடங்களிலும் அன்னதானம் நடத்தினார். தஞ்சை அரசருக்கே, ஒரு லட்சம் வராகன் கடன் தருமளவு உயர்ந்தார். திருவையாற்றில் மறைந்தார்.
இன்று பச்சையப்ப முதலியார் பெயரில், ஆறு கல்லூரிகளும், ஏழு பள்ளிகளும், 28 கோவில்களில் தருமங்களும் சிறப்பாக நடக்கின்றன. காஞ்சி சபாபதி முதலியாரின், பச்சையப்ப முதலியார் நீதிமாலை, பொன் மாலை, மற்ற பாடல்கள் பச்சையப்பர் தமிழிலக்கியமாய் ஒளி வீசுகின்றன.
முனைவர் மா.கி.ரமணன்