ஆசிரியர் ஜேக்கப், 89 வயதுப் பெரியவர். நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பும், தனிச் சிறப்புடன் திகழ்கிறது. மொத்தம், 21 கதைகள். வித்தியாசமான வர்ணனைகள், பனித்துளி ஏந்தும் ரோஜாக்களைப் போல், நம்மை பரவசப்படுத்துகின்றன.
‘அவள் தலைமுடி தரையில் தட்டும். குனிந்து நடந்தால் முடி தரையைத் துடைக்கும். அவள் பனம்பூ போன்ற மணமும், இடித்த மஞ்சள் போன்ற நிறமுமாய் அழகாய் இருந்தாள்...’ (பக்.48).
‘தாலிக்கொடி’ என்று ஒரு கதை. பாதிரியார் தாலியை வாங்கி ஆசீர்வதித்து, மாப்பிள்ளை கையில் கொடுத்து தாலி கட்டச் சொல்வது வழக்கம். அவ்வண்ணம் பாதிரியார், மணமகன் வீட்டாரிடம் தாலியைக் கேட்டார். அவர்கள் விழித்தனர். ‘மஞ்சள் கயிறாவது இருக்கிறதா?’ என்றால் அதுவும் இல்லை.
மணமக்களை அப்படியே நிறுத்திவிட்டு, பாதிரியார் தம் வீடு சென்று மனைவியிடம், ‘உன் தாலியை கழற்றித்தா’ என்றார். பதிபக்திமிக்க மனைவி, தன் தாலிக்கொடியை உடனே கழற்றிக் கொடுத்தார். அதைக் கொண்டு கல்யாணத்தைப் பாதிரியார் நடத்துகிறார்.
இதுபோன்ற உயர்ந்த பல கதை மாந்தர்கள் உலவும் நடைச் சித்திரங்கள்.
எஸ்.குரு