மனிதனின் வாழ்வில், எண்கள் இன்றியமையாத பங்காற்றி வருகின்றன என்ற கருத்தை தெள்ளத் தெளிவாக, 17 அத்தியாயங்களில் நூலாசிரியர் விளக்கி உள்ளார். பதிப்புரையில் தெரிவித்திருப்பது போல, எண்களின் பரிணாம வளர்ச்சியை மிக விரிவாக கூறியிருக்கும் முதல் புத்தகமாக விளங்குவது இதன் தனிச் சிறப்பு. இதற்கு நூலாசிரியரையும், பதிப்பகத்தாரையும் பெரிதும் பாராட்டலாம்,
மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் விளக்கியது போல், எண்களின் பரிணாம வளர்ச்சியை, கற்காலம் முதல் தற்காலம் வரை மிக நேர்த்தியாக இப்புத்தகத்தில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஜார்ஜ் இப்ரா இயற்றிய, ‘தி யுனிவர்சல் ஹிஸ்டரி ஆப் நம்பர்ஸ்’ எனும் ஆங்கிலப் புத்தகமே, எண்களை பற்றிய அநேக செய்திகளை விளக்கும் புத்தகமாக விளங்குகிறது.
அது போன்ற புத்தகம் தமிழில் எழுதப்படவில்லையே என்ற ஏக்கத்தை இந்த புத்தகம் தீர்த்து வைத்துள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பைக் காணலாம். இப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு, நூற்றுக்கணக்கான படங்கள், பலம் சேர்க்கின்றன.
காலத்திற்கு ஏற்றவாறு மனிதன் எவ்வாறு தன்னை தயார்படுத்தி கொண்டானோ, அதேபோல் எண்களும், மனிதனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக தம்மை மாற்றிக் கொண்ட செய்தியை, ஒவ்வோர் அத்தியாயத்திலும் காண முடிகிறது.
மனிதனுக்கு மட்டுமின்றி, மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கும் கூட, எண்களை பற்றிய சிந்தனை இயல்பாகவே அமைந்துள்ளது என்ற செய்தியை இந்த நூல் வாயிலாக அறியலாம்.
உலகில் தோன்றிய அநேக சமூகத்தினரும், தங்கள் வாழ்வில் பயன்படுத்திய எண்களின் வடிவங்களை, தகுந்த படங்களுடன் விளக்கி உள்ளார், நூலாசிரியர்.
தமிழ் எழுத்து நடை கடினமாக அமைந்திருப்பது சற்று சலிப்பை அளிக்கிறது. மேலும் எண்களின், ‘பேஸ்’ எனும் சொல்லை, ‘அடிமட்டம்’ என மொழிபெயர்த்துள்ளார். அதற்கு சரியான தமிழ் கலைச் சொல் ‘அடிமானம்’ ஆகும். இதுபோல் சில தமிழ்க் கலை சொற்களை திறம்பட பயன்படுத்தியிருந்தால், இப்புத்தகம் மேலும் பொலிவு பெற்றிருக்கும்.
பதிப்புரையில், கணிதம் சார்ந்த மேலும் பல நூல்கள் வெளிவர இருக்கின்றன என, தெரிவித்திருப்பது கணித ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்வை அளிக்கிறது. இதுபோன்ற பல புத்தகங்கள் வெளிவந்தால், நிச்சயம் தமிழ் வழி மாணவர்களுக்கு கணிதத்தின் மீது, ஆர்வம் பன்மடங்காக பெருகும் என்பதில் ஐயமில்லை.
பை சிவா