பொதுவாக, தமிழில், சமகாலத்திற்கு தேவைப்படும் புதிய சொற்களை உருவாக்குதல் அல்லது மொழிபெயர்த்தல் பணியில், தமிழகத்தை விட, யாழ்ப்பாணம் மற்றும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.
தமிழகத்தில், ஆட்சி சொல் அகராதியை ஆட்சி மாறும் தோறும் புதிது புதிதாக உருவாக்குதல் மட்டும் நடைபெறுகிறது. அரசு ஆவணங்களில் உள்ள, சமகாலத் தேவைக்கான தமிழ்ச் சொற்களின் பொருள், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே விளங்கும்.
புதிய சொல் உருவாக்கம், மொழிபெயர்ப்பு இரண்டிலும் அதிக சவாலை எதிர்கொள்வது, தமிழ் ஊடகங்கள் மட்டுமே. அவையும் பெரும்பாலும், ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழில், புதிய முயற்சியாக, இந்த ‘சொல்வேட்டை’ என்ற நூல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து வெளிவரும், ‘அட்லான்டிக்’ இதழில், 1983ல் மூத்த ஆசிரியராக இருந்த பார்பரா வால்ராப், தன் வாசர்களையே முற்றிலுமாக ஈடுபடுத்தி, புதுப்புது சொற்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தினார்.
அந்த அடிப்படையில், மொழியுணர்வின் காரணமாக, தமிழில் புதிய சொற்களைத் தேடும் முயற்சியில், சொல்வேட்டை எனும் தலைப்பில், தினமணி நாளிதழில், 50 வாரங்கள், ஏராளமான வாசகர்களின் ஈடுபாட்டுடன், 50 ஆங்கில வார்த்தைகளுக்கு, ஆழ்ந்த ஆய்வின் வெளிப்பாடாக சரியான தமிழ் சொற்களை பொருத்தமாக உருவாக்கியுள்ளார், நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்.
போபியா (வெருட்சி) என்ற சொல்லில் துவங்கி, அக்ரோனிம் (தொகுசொல்), சப்லிமினல் (உள்மறை உணர்நிலை), லிட்மஸ் டெஸ்ட் (நிலையறித் தேர்வு), ஆல்டர் ஈகோ (தன்மாற்றுரு), ஆன்டெனா (அலையுணரி), பென் டிரைவ் (தரவகக் கோல்) என, சொல்வேட்டை சில இடங்களில், வரலாற்று ஆய்வுடன் (புளூடூத், டுவீட்) விளக்கப்பட்டு உள்ளது.
அலர்ஜி (ஒவ்வாமை), பாஸ்ட்புட் (விரைவு உணவு), இனிஷியல் (முதலெழுத்து) போன்ற வழக்கில் உள்ள சொற்களும் அலசப்பட்டுள்ளன.
ஸ்பெல்லிங் (எழுத்துக் கோர்வை) என்ற சொல்லுக்கு (எழுத்துக் கோவை) என்பது இணையானதாக அமையலாம். எனினும் தமிழ்மொழிக்குப் புதினம், சிறுகதை, நாடகம், இசை, புதுக்கவிதை, அறிவியல் என முன்னோடிகளாக விளங்கியவர்கள் நீதித்துறையைச் சார்ந்தவர்களே.
அந்த வகையில் இந்த ‘சொல்வேட்டை’ மூலம் தமிழில் புதுச்சொற்களை உருவாக்கும் முயற்சியில், புதுமையைச் செய்துள்ள நீதியரசரின் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது.
பின்னலூரான்