ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய புதினம் இது. என்றாலும், சோழர் காலத்திய முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பலவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இக்கதை நிகழ்வின் காலம் கி.பி., 1070.
கதை நாயகி, அம்ருதா ஒரு கற்பனைக் கதாபாத்திரமே. காம்போஜ தேசத்துப் பேரழகி அம்ருதா. தேச ஜாதகத்தின் படி வரவிருக்கும் ஒரு பிரளயத்தையே நிவர்த்திக்கக் கூடிய அவளது சாதகமான ஜாதகத்தின் காரணமாக, சோழ மன்னன் அதிராசேந்திரனுக்கே மனைவியாக்க
வரவழைக்கப்படுகிறாள்.
ஜாதகத்துக்குத் தான் மரியாதை; பெண்ணுக்கில்லை. சோழ தேசத்தில் புகும் அம்ருதாவுக்கு ஏற்படும் கசந்த அனுபவங்கள், மன ஓட்டங்கள், பிரச்னைகள், விருப்புவெறுப்புகள், அவளை அடைய விரும்புவோரால் ஏற்படும் சலனங்கள், அனைத்தையும் தனக்கே உரிய ஆற்றோட்ட நடையில் முன்வைக்கிறார் நூலாசிரியர் திவாகர்.
– கவிஞர் பிரபாகர பாபு