தமிழ் மொழிச் செழுமையின் முழுவீச்சையும் பயன்படுத்த முடிந்திருப்பது கவிதையின் வாயிலாகத்தான் என்றால், அது மிகையில்லை. சங்க இலக்கியம், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை என, கவிதையின் பரிணாம வளர்ச்சி நிலைகளில், இன்றளவும் எளிதாக எல்லோராலும் ரசிக்கப்படுவது கவிதைகள் தான்.
‘வெயிலில் நனைந்த மழை’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே ஒரு இதம் தோன்றுகிறது. எளிய அழகான வார்த்தைகளில், கவித்துவக் கணங்களை கொண்டு வரும் லாவகம், கவிஞர் மணிக்கு வாய்த்திருக்கிறது. கவிதையைக் கருவியாகக் கொண்டு, தன் மொழிப் பயன்பாடுகளின் வாயிலாக, நினைவுகளை முன்னுக்கும், பின்னுக்கும் நகர்த்தி, நம்மை ஓர் ஊஞ்சலாட்டத்திற்கு உட்படுத்தி லயிக்கச் செய்கின்றன, இந்தத் தொகுப்பின் கவிதைகள்.
ஒரு கவிதையில், ‘உண்மைக்கும், பொய்க்குமான ரகசியங்களால் ஆனது வாழ்க்கை’ என்கிறார் கவிஞர். எவ்வளவு அழகான வரிகள்.
கற்பனைகளைக் கவிதையாக்கும் போது நிஜத்தைப் புறந்தள்ளாமல் மனதுக்கு நெருக்கமான வாசிப்புத் தன்மையைக் கொணர்வதில் இந்தக் கவிதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலும், மழை, மழை சார்ந்த நினைவுகள், மழையை சுயத்தோடும், சமூகப் புழங்குதல்களோடும் பொருத்தி எழுதி இருப்பது, இந்தத் தொகுப்பின் சிறப்பு.
மழையும், வெயிலும் ஆண்டாண்டு காலத்திற்கும் கவிதையின் பாடுபொருள்களாக இருக்கும் என்ற கவிஞரின் நம்பிக்கை தீர்க்க தரிசனமானது. அதைத் தன் மொழியின் கூர்மையாலும், எண்ணச் சிதறல்களாகவும் சிறப்புற நிரூபித்திருக்கிறார் கவிஞர்.
ஒரு கவிதையில் சொல்வதுபோல,
ஒன்றுக்கொன்று எவ்வளவுதான்
முரண்பட்டு நின்றாலும்
நிலத்திற்கு
மழையை
அழைத்து வருவதென்னவோ
வெயில்தான்
மழை, வெயில் என, முரணான இரு வேறு பருவ மாற்றங்களை, வாழ்க்கையின் அனைத்தோடும் ஒப்பிட்டுக் கவிதையின் பாதையையும், பயணத்தையும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்லும் இத் தொகுப்புக்கு, கவிஞர் அறிவுமதியின் அணிந்துரை கூடுதல் அழகு சேர்க்கிறது.
நேர்த்தியான அச்சு, உள்ளோவியங்கள், வடிவமைப்பு என, வாசிப்பின் கவனத்தைச் சிதறடிக்காத வகையில், மிகச் சிறப்பான முறையில் நம்மையும் நனையச் செய்து குளிர்விக்கிறது, இந்தத் தொகுப்பு.
பொன். வாசுதேவன்