தமிழ் நவீன நாடகத் துறையில் தவிர்க்க முடியாத பெயர், மு.இராமசுவாமி. தான் அவ்வப்போது, அங்கங்கே எழுதிய சற்றே நீண்ட குறிப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். வெற்றுக் குறிப்புகள் அல்ல; அத்தனையும் சுவாரசியம்! ஈ.வெ.ரா., தனிநாயக அடிகள் போன்ற ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள், நாடகம் தொடர்பான வரலாறு – நடப்புப் போக்குகள், நாடக ஆக்கம் பற்றிய அனுபவங்கள், தொட்டுக்கொள்ள கொஞ்சம் சினிமா என்று தாவித் தாவி நகர்கிறது, நூல். ஆசிரியரின் தமிழ் நடையில் ஓர் அம்சம். புதுமையாகச் செய்ய முயல்கிறார். ‘கடைசி நேரத்து அரக்கப் பரக்கத்துடன்’ ஏதோ காரியத்தைச் செய்கிறாராம்.
சுவாரசியத்துக்கு ரெண்டு சாம்பிள்...
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவியருக்கு நடிப்பைப் பற்றிச் சொல்கிறார்: நடிப்பு என்பது, ஒரு கற்பனைச் சூழலில் உங்களுக்குள்ளோ எதிர்த் தரப்பினரிடமோ எதிர்வினையாற்றல் என்பது தான்! ஆகவே வசனங்களை மனப்பாடம் செய்யாதீர்கள். வசனங்களைக் கேட்பதாகப் பாவனை அல்லது பாசாங்கு செய்யாதீர்கள். வசனங்களை அப்பொழுது தான் கேட்பதாகப் புதிதாகக் கேட்கப் பழகுங்கள். அப்பொழுது தான், அந்த எதிர்வினை என்பது உண்மைக்கு நெருக்கமாய் அமையும். உங்கள் வசனங்களுக்குள்ளேயே நீங்கள் உழன்று கொண்டிருக்காதீர்கள். புதிதாக உணர்வதற்கான வேலையே அதில் இல்லாது போய்விடும். கருத்துகளைக் கண்களின் தொடர்பால் அர்த்தப்படுத்துங்கள். நடித்துவிடலாம்.
இன்னொரு சுவாரசியமான அனுபவம். காந்திகிராமத்தில், 37 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நாடகப் பட்டறை. ஆசிரியர் மு.இராமசுவாமியுடன் இருந்த பலரில் இன்றைய பிரபல கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். மகாபாரத நாடகத்தில் இராமசாமிக்கு திருதராஷ்டிரன் வேடம். கிருஷ்ணமூர்த்திக்கு பீஷ்ம பிதாமகர் வேடம். கிருஷ்ணமூர்த்தியின் மனதுக்குள் பீஷ்மர் கதாபாத்திரம் இறங்கவில்லை. தடுமாறினார். இதனால், நாடகம் நிகழ்த்துவது என்பது மாறி நாடகம் வாசிப்பது என்று தீர்மானமாகியது. அதாவது எல்லா நடிகர்களும், கதாபாத்திர பாவனையில், நாடகப் பிரதியைப் பார்த்து வாசித்துக் காட்ட வேண்டும்.
அதை மு.இராமசுவாமி இப்படி எழுதுகிறார்: ‘அது ஒரு வித்தியாசமான அனுபவம். நடிகன் (வாசிப்பவன் – பார்வையுள்ளவன்), கதாபாத்திரம் (பேசுபவன் – பார்வையற்றவன்) என்பதான இரட்டைமை அனுபவம் நமக்கு வசப்படுகையில், அதன் ஆக்கினைக்கு மனசு ஆட்பட்டுப் போகையில், இரண்டு மனநிலையையும் தொட்டுக்கொண்டும் விட்டுக்கொண்டும் மனசு விளையாடிக் குதூகலிக்கையில், அதன் அழகே தனியாய்த் தான் இருந்தது!’
ரமேஷ் வைத்யா