திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக் கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்து விட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர். நூலில், திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. (பக். 30 – 50). ஆழ்வார்கள் காவிரி குறித்துப் பாடியுள்ள பாசுரங்களை மிக விரிவாக விளக்கிக் காட்டுவதும் (பக். 60 – 68), சோலைகள், பூம்பொழில்களின் விளக்கமும் (பக்.69 - 77), ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக, அரங்கனின் குணங்களையும், பெருமைகளையும் விளக்குவதும் (பக். 97 – 252), கோவிலின் அனைத்து விழாக்களையும் ஒன்று விடாமல் விளக்குவதும் (பக். 261 – 291), அங்குள்ள சப்த பிரகாரங்களின் விளக்கமும் (பக். 310 – 327), நூலாசிரியரின் ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள். பின்னிணைப்பில், கோவில் நிர்வாகத்தின் பத்துக் கொத்துக்களின் விளக்கமும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அரங்கன் குறித்துப் பாடியுள்ள பாசுரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
- டாக்டர் கலியன் சம்பத்து