ஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற் போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு, படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது.
அயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியுரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, ௨௦ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் ஆராய்ந்தும் பகுத்தும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். சிற்றிதழ்க் கட்டுரைகள், எழுத்துகள் வாயிலாக, திரைப்படங்கள் வரை அலசியிருப்பது நடைமுறைக் காலத் தேவையே ஆகும். இலக்கியப் போக்குகள் பற்றியோ ஜாதிகளின் இருப்பு மற்றும் எதிர்ப்பு நிலைகள் பற்றியோ அறிய விரும்புவோருக்கு அருமையான நூல் இது. சிறுகதைகளில் பயிலும் பல பழமொழிகளை தலித் பழமொழிகள் என்னும் தொனியில் பார்த்ததை மிகவும் ரசித்தேன்.
அது அப்படி மட்டும் அல்ல என்றாலும் எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலும் வறுமையிலும் இருந்து பிறக்கின்றன என்பதுவே உண்மை.
க.சீ.சிவகுமார்