பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன.
தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை வந்தபோது, விவசாயிகளின் அரை நிர்வாண ஆடைகளைப் பார்த்து, தானும் மேற்சட்டை அணிவதில்லை என்று முடிவு எடுத்தார்; இந்திரா, சேலை மீது அதிக ஈடுபாடு கொண்டவர் (பக்.68) என்று, ஆடைகளை ஆய்வு செய்கிறார்.
அணிகலன், காலுக்கு கொலுசு முதல், தலைச்சுட்டி வரை பெண்கள் நகைகளை விவரிக்கிறார். திருமணத்தில் தாலியும், மெட்டியும் பெறும் சிறப்பைக் காட்டுகிறார். ஆடைகளில் பூ வேலைப்பாடுகள், வீட்டைப் பராமரித்தல், நல்ல நாள் பார்ப்பது, நிலத்தேவர் வழிபாடு, மாவிலை தோரணம், திரைச்சீலைப் பயன்பாடு, தமிழன் அளவை முறைகள், வீட்டுச் சடங்குகள், குழந்தை வளர்ப்பு, வழிபாடு ஆகியன விளக்கப்பட்டுள்ளன.
முனைவர் மா.கி.ரமணன்