முகப்பு » கதைகள் » அஸ்தினாபுரம்

அஸ்தினாபுரம்

விலைரூ.380

ஆசிரியர் : ஜோ டி குருஸ்

வெளியீடு: காக்கை பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள்; ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ ஆமந்துரையில் பிறந்த அமுதனுக்கும், சென்னை செம்மாங்குப்பத்து ஆனந்திக்கும் வாழ்வில் இயற்கை சூட்சுமமான முடிச்சு போட்டிருந்தது என்பது தான் அஸ்தினாபுரம் நாவலின் கதை.
கதைக்கு அஸ்திவாரமே இந்த உறவுதான். அது உண்டான விதம், விரிந்து பரந்த விஸ்தாரம் எல்லாம் அழகாகச் சொல்லப்படுகிறது. நாவல் சொல்லப்படும் விதத்தில், ஆசிரியரின் முழு வளர்ச்சி அடைந்த நடை தென்படுகிறது.
தன்னைத் தானே வெளிப்படுத்தும் வகையில் நெய்தல் சமுதாய உணர்வுகளை, தன் நாவலின் மற்ற கதாபாத்திரங்கள் மூலம் வெளிக்கொணர்கிறார், ஜோ டி குருஸ். ஆழிசூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம் வரை, அவரது சொற்பாங்கின், கதை நடையின் பரிமாண வளர்ச்சியை, வாசிக்கிற நம்மால் நன்கு உணர முடிகிறது.
அவர் எடுத்துக் கொண்டுள்ள சமுதாயத்தின் நிலையை, நடப்பியல் முறையில்தான் காண்கிறார். ஒரு வகையில் அஸ்தினாபுரம் நாவலை இன்றைய நிலையில், அவர் தேர்ந்தெடுத்துள்ள சமுதாயத்தின் விமர்சனமாகவே காண்கிறோம். எழுதப்பட்ட மொழியும் அந்த சமுதாயத்தினதே. பாத்திரங்கள் எல்லோருமே நெய்தல் நிலத்து மனிதர்கள்.
நாவலின் நாயகன் அமுதனின் செயல்பாடு பற்றி ஆசிரியர் சொல்லிச் செல்கையில் நம்பிக்கையின்மையைத் தாண்டி, கதாநாயகன் திருப்புமுனையைக் காணும் காரணத்தால், ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. நாவலுக்கு விறுவிறுப்பையும் சேர்க்கிறது. கப்பல், கடல் சார் பணியில் சேர்ந்த பிறகு, துறைமுகங்களில் ஆரம்பத்தில் மேலாண்மையால் கதை நாயகன் அமுதன் நடத்தப்படும் விதமும், பின்னர் சற்று மூத்தநிலைக்கு வந்த பிறகு அவனுள் ஏற்படும் மாற்றங்களும், அந்த துறையில் ஈடுபட்டோருக்குத்தான் புரியும்.
ஆயினும் அதைச் சொல்லும் பாங்கில் மற்றவர்களுக்கும் தெரியுமாறு சொல்வதில், ஆசிரியரது எழுத்தனுபவமும் திறமையும் புலப்படுகின்றன.
கடல் வழி வணிகம், ஒரு ‘ராட் ரேஸ்’. துரோகங்கள், சூழ்ச்சிகள், ஏமாற்றுவேலைகள் நிரம்பியுள்ள இடம் துறைமுகம். இந்த நிலையை தனது நாவலில் உருவகப்படுத்துவதில், ஆசிரியர் வெற்றி காண்கிறார்.
‘‘தாராளமயமாக்கல்’ கொள்கையின் மூலம், தனியார் நிறுவனங்கள் துறைமுகக்  கையாளுமையை எடுத்துக் கொண்டாலும், செயல்பாட்டிற்கான உரிமங்கள் கொடுக்கும்  வலுவான பிடி, பிராந்தியத் துறைமுக நிர்வாகத்திடமும் சுங்கத்தினிடமும்  இருந்தது. டெர்மினல் தன்னிச்சையாகச் செயல் பட அனுமதிக்கப்பட்டாலும் அது  சார்ந்த துறைமுக நிர்வாகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக  வேண்டிய கட்டாயம் இருந்தது’ என்று சொல்கையில், அரசு சாதாரணமாகச்  சொல்லிவரும் ‘தாராளமயமாக்கல்’ கொள்கையின் கோட்பாட்டிற்கும்  செயல்படுத்துகையில் காணும் பயிற்சிக்கும் உள்ள பெரும் இடைவெளியும் அதனால்  பெருகும் ஊழல்களும் தெளிவாக்கப்படுகின்றன.
கப்பல்களைச் சரியான துறையில் கொண்டுவர ஏஜன்டுகள் துறைமுக
அதிகாரிகளைக்  ‘கவனிக்க’ வேண்டிய
சீரழிந்த நிலையையும் இன்றைய நிலையிலும் காண்கிறோம்  என்பது உண்மை.
துறைமுகத்துக்கு வெளியிலிருந்து, வந்து போகும்  வெளிநாட்டுப் பெருங்கப்பல்களையும் துறைமுகத்தினுள் நுழையும் வெளியேறும்  ராட்சத லாரிகளையும் பார்த்து மலைத்து நிற்கையில், அவற்றை நடத்துவதில்  துறைமுகப் பணியாளர்களுக்கு ஏற்படும் பல தொந்தரவுகளையும் ஊழல்  விபரீதங்களையும், தெரிந்து கொள்ளாத பலருக்கு இந்த நாவல் உண்மைகளை எடுத்துக்  கூறுகிறது. துறைமுகம் ஒரு மாயதேசம்; அங்கு நடக்கும் பல சட்டவிரோதச்  செயல்கள் வெளியில் தெரிவதில்லை!
‘‘அதிகார மையங்களுக்கு வருவோரும்  எப்படி பிரச்னை கொடுத்து, பணமோ, சலுகையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதில்  குறியாய் இருக்கிறார்களே அல்லாது, யாருக்கும் பிரச்னைகளை  தீர்த்து  வைப்பதில் அக்கறையே இல்லை. கப்பலுக்குக் கிளியரன்ஸ் தராமல் இழுத்தடிக்கும்  போர்ட் ஹெல்த் ஆபீசர், பிரச்னையைக் கப்பல் ஏஜன்சி அசோசியேஷன் மூலம் டெல்லி  வரை கொண்டு போயும், எந்த நடவடிக்கையும் யார் மீதும் இதுவரையிலும்  எடுக்கப்படவில்லை,’’ என்று ஆசிரியர் சொல்லும்போது, துறைமுகம் சார்ந்த  எவரும் ஒப்புக்கொள்ளத் தான் செய்வர். ஏனெனில் அது உண்மையாக நடக்கும்  செயல்தான்!
அபாயகரமான சரக்கு கொண்டு வந்திருந்த ஒரு கப்பல் படும் அவஸ்தையும், அதனைக்  கையாளும் விதமும் அழகிய முறையில் சொல்லப்பட்டுள்ளது. ‘‘கப்பல் எப்போது  வரும், பிரச்னையை எப்போது கிளப்பலாம் என்று ஆவலோடு காத்திருந்த முற்போக்கு  பொது சேவைக்காரர்களுக்கு, தம்மளவில் தைரியம் இல்லாததால் ஜெட்டிக்கு வரும்  பாதையில், எங்கள் வலைகளை அறுக்கிறார்கள் என்று மீனவர்களை ஒருபுறம்  தூண்டிவிட்டு, மறுபுறம் வீ.சி.எம்., (வினில் க்ளோரைட் மானோமர். இது ஒரு வகை  திரவம். இதை கையாள்வதற்கு விதிமுறைகளுண்டு) இறக்கப்படும்போது வரும்  கசிவால் சூழல் பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குத்  தொடர்ந்து விட்டார்கள்,’’ என்று சொல்கையில், இன்றைய அரசியல்வாதிகள், பொதுநல  முற்போக்கு சேவையாளர்கள் என்று காட்டிக் கொண்டு எல்லா வேலைகளுக்கும்  முட்டுக்கட்டை போடும் செயல்பாட்டின் தோலை உரித்துக் காட்டுகிறார். அதைச்  சமாளிக்கும் விதமும் நன்கு விவரிக்கப்படுகிறது.
சாகித்ய அகாடமியின் கொற்கை நாவலுக்காக விருது பெற்ற ஆசிரியர் ஜோ டி குருஸ், இந்த நாவலில் கடல் வழி வணிகம், துறைமுகங்கள் சார்ந்த இயல்பியல் கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஆசிரியரை அறிந்தவர்களுக்கு, இது அவரது சுயசரிதையின் பிரதிபலிப்பாகவே தோன்றும்.
மொத்தத்தில் இந்த நாவல், எல்லா பரிமாணங்களிலும், ஒரு நல்ல நாவலுக்குண்டான தகுதியைப் பெற்று விடுகிறது. இதுவரை தமிழில் இதுபோன்று ஒரு தொழிலைக் கதாநாயகனாகக் கொண்ட எழுத்து வெளிவந்ததில்லை. ஆம். இந்த நாவலில் துறைமுகத் தொழிலே கதாநாயகனாக ஆகிவிடுகிறது.
‘இதுதான் எனது கடைசி நாவல்’ என்கிறார் ஆசிரியர். ஆனால் நாவலைப் படிக்கையில் அது சாத்தியமாகும் போல் தோன்றவில்லை!

கே.ஆர்.ஏ. நரசய்யா
 எழுத்தாளர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us