புனைவு எழுத்தில் அசோகமித்திரனைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல இனியும் மிச்சம் எதுவும் இருக்க முடியாது. வாழும் தமிழ் எழுத்தாளர்களில் தனக்கு உயர்வோ நிகரோ இல்லாத ‘நியூமரோ யூனோ’. எழுதுவது என்று வந்த பிறகு அதில் புனைவு, அபுனைவு என்று வேறுபாடுகள் எதுவும் வைத்துக்கொள்வதில்லை, அ.மி., இன்னும் இவர் ஓய்வு பெற்றுவிடவில்லை என்பதற்கு, இவரது இந்தப் புத்தகம் ஸ்தூலமான ஆதாரம். பசித்தவன் மட்டும்தான் பழங்கணக்கு பார்ப்பானா; நாற்பது பேருக்கு விருந்துபசாரம் செய்தவன் கூடப் பார்க்கலாம். ஏற்கனவே எழுதித் தீர்ந்துவிடாத தன் வாழ்க்கையின் சில தீற்றுகளான சம்பவங்களை துண்டு துணுக்காக எழுதிச் சொல்கிறார் அ.மி., இவற்றில் மிகச் சிலவற்றை, மிகச் சில பகுதிகளாக இவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் நாம் பார்த்திருக்கலாம். அவற்றின் முழுமையை இந்தக் கட்டுரைகளில் சுட்டுகிறார்.
‘ஸ்டேஷனரி போன் என்றால் என்ன’ என்று கேட்கப் போகும் தலைமுறைக்கு, போன் வந்த கதையைச் சொல்கிறார். அப்படித்தான் ராலே சைக்கிளின் மகாத்மியமும். கதையைச் சொல்கிறார் என்றால் சாதாரணமாக இல்லை. போன் கதையைப் பார்க்கலாம். தொலைபேசி இலாகாவினர் கொடுக்கும் கருவி பயன்படுத்த ஏதுவாக இருந்திருக்கவில்லை. அ.மி. எழுதுகிறார்: ‘எங்கள் வீட்டுச் சாவுச் செய்தியைக்கூட வெளியே ஒரு மருந்துக் கடைக்குப் போய்ப் பேசினோம். அந்தக் கடையில் தொலைபேசி இருந்த இடத்தில், எல்லோரா சிற்பத்தில் உள்ள நடனப் பெண்கள் தான் பேசலாம். சாதாரண மனிதர்களின் உடலை அவ்வளவு நெளிய வைக்க முடியாது’.
என்ன கவர்ச்சிகரமான எடுத்துக்காட்டு! இடக்கையை ஆடியாக்கி, வலக்கையைத் தலைக்குப் பின்னால் எடுத்துவந்து மோதிர விரலால் பொட்டு வைத்துக் கொள்ளும் தனபாரம் தாங்காப் பேரழகியின் சிற்பம்! தொலைபேசிக் கட்டுரையிலேயே அதற்கு முன்னதாக வந்த ரேடியோ பற்றியும் குறிப்பு உணர்த்துகிறார். அது ரேடியோவுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டியிருந்த காலம். வாங்காவிட்டால் அது கப்பல் கொள்ளைக்காரர்கள் குறித்த சட்டத்தின் கீழ் குற்றமாம். ஆங்கிலேயர்களாக இருந்தால் பொது இடத்தில் தூக்கில் போடுவார்களாம். அசோகமித்திரன் நல்ல பாடல்களை ‘ரகசியமாக’ கேட்டிருக்கிறார்!
அ.மி.,-யின் ஜெமினி ஸ்டூடியோ அனுபவங்கள், அவரது தொடர்ந்த வாசகர்களுக்குப் பரிச்சயப்பட்டவை தான். இந்தப் புத்தகத்தில் சில புது விஷயங்களைத் திறக்கிறார். மூன்று பிள்ளைகள் என்ற ஜெமினி படம் தோல்வி அடைந்ததால், அதைப் பெட்டியில் போட்டுப் புதைத்து
விட்டாராம் முதலாளி. அந்தப் படத்தின் கதையைக் கோடி காட்டுகிறார். தகப்பனார் புரிந்த திருட்டுக் குற்றத்தைத் தான் ஏற்று, மூன்றாவது மகன் சிறைக்குச் செல்கிறான். தகப்பனார் தூக்கில் தொங்குகிறார். முதல் இரு பிள்ளைகளும் அம்மாவை நடுத்தெருவில் விடுகிறார்கள். தண்டனைக் காலம் முடிந்து மூன்றாவது மகன் வெளியில் வந்து அம்மாவைத் தேடுகிறான். வேலையும் தேடுகிறான். சினிமாக்
கம்பெனியில் வேலை கிடைக்கிறது. படத்திற்கு இசை அமைக்க ஒருவர் வருகிறார். சந்திரபாபு! அவர் மேற்கத்திய பாணியில் டியூன் போட, படத் தயாரிப்பாளர் சொந்தமாகப் பாடுகிறார். சந்திரபாபு மயக்கம் போட்டு விழுவதாகக் காட்சி.
இதை விவரித்துவிட்டு, அப்படியே சந்திரபாபு என்ற கலைஞனைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப் புகுந்துவிடுகிறார் அ.மி., ஒரு சாமியாரிடம் தன் பிரச்னையைச் சொன்னாராம் சந்திரபாபு. ‘எனக்குப் பயமாக இருக்கிறது. நான் பிறந்ததிலிருந்து எல்லாரும் என்னைப் பயமுறுத்தி
வைத்திருக்கிறார்கள்’.
இந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறார்: ‘எனக்கு நிஜமாகவே பெரிய வியப்பு. நாம் எல்லா நேரத்திலும் பயத்தில் தான் இயங்குகிறோம். இதை ஒரு தனிப்பயிற்சியும் இல்லாமல் சந்திரபாபு கூறிவிட்டார்! சந்திரபாபுவுக்கு எங்கோ ஓரிடத்தில், ஒரு கணம் ஒளி கிடைத்திருக்கிறது’. ஒரு சம்பவத்திலிருந்து, படிக்கிற நாமும் தரிசனம் பெறக் கற்றுக் கொடுக்கும் விஷயமாக இது படுகிறது.
‘நல்லதன்றிப் பிறிதொன்றும் கூறேல் நீத்தார் பற்றி’ என்று ஒரு கட்டுரை. Of the dead, nothing but goog என்ற ஆங்கிலப் பழமொழியின் மீது கருத்தாடுகிறார். மாலை நான்கு மணிக்கு இறந்து போன ஒருவரின் மரணச் செய்தியும் வாழ்க்கை வரலாறும் ஓர் இரங்கல் கட்டுரையும் அடுத்த நாள் காலைப் பத்திரிகையில் இடம் பெறுவதைப் பற்றி கொஞ்சமாக வியக்கிறார்.
‘வயதான ஒரு பிரமுகர் இருமுறை இருமினால், பத்திரிகைகள் எல்லாரையும் முந்திக் கொள்ளத் தயாராக இருக்கும்’. இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும், புத்தகத்தின் இரண்டாவது கட்டுரையை மறுபடி படிக்கத் தோன்றியது. அது தி.க.சிவசங்கரனுக்கான அஞ்சலிக் கட்டுரை. அ.மி.,யும் தி.க.சி.,யும் ஒன்றாகக் கலந்துகொண்ட ஒரு கூட்டம். எனக்கு அப்போதைய தமிழ் இலக்கிய அரசியல் அவ்வளவாகத் தெரியாது. நான் (சுந்தர ராமசாமி எழுதிய) பிரசாதம் தொகுப்பைப் பாராட்டிப் பேசினேன். தி.க.சி.,-க்குத் தாங்க முடியவில்லை.
கொள்கைப் பிடிப்பைக் கைவிட்டு விட்டு ‘பிரசாதம்’ போன்ற படைப்புகளைப் படைப்பவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள், அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார். நான் அவருடன் பேசவே பயந்தேன். சுந்தர ராமசாமியை முதன்முறையாகப் பார்த்தபோது இதுபற்றிக் கேட்டேன். அவர், ‘தி.க.சி., பாவம்! அவருக்கு ஒண்ணும் தெரியாது’ என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தார். ஜெயகாந்தன் ஒருமுறை, ‘தி.க.சி., தன் மூக்கைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னதும், ஜெயகாந்தனின் படைப்புகள் தி.க.சி.,-யின் கண்ணில் படவில்லை’ என்று எழுதுகிறார்.
அஞ்சலிக் குறிப்பின் முத்தாய்ப்பு வரி: ‘இரங்கலோடு சாதனைகளையும் தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது செய்யாவிட்டால் பின் எப்போது?’ இந்த ‘நாக் அவுட்’ தான் அ.மி.யின் எழுத்துகளில் அபாரமாகத் தொடர்ந்து வருகிறது. எடை கூடுதல்; ஆனால் அந்த எடை தெரியாது என்பதே ‘அபாரம்’ என்ற சொல்!
தொடர்புக்கு: ramevaidya@gmail.com
– ரமேஷ் வைத்யா