இந்த நூலில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த வட்டாரமே ஆய்வுக் களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்துக் கலைகள், கைவினைக் கலைகள் எனும் இரு பிரிவாகப் பிரித்து ஆய்வு செய்கிறார், நூலாசிரியர். இசை, பாடல்கள், ஆட்டங்கள், கூத்துக்கள், வீரக்கலைகள், சடங்குக் கலைகள் ஆகியவை நிகழ்த்துக் கலையின் பிரிவுகளாக விளக்கப்பட்டுள்ளன.
கண்கட்டு வித்தைக்காரனின் துடி ஓசை, பாம்பாட்டியின் மகுடி ஓசை, சாட்டையடிப்பவனின் உறுமி ஓசை, குலவை, சங்கு, உறுமி மேளம், நையாண்டி மேளம், கொலு மேளம் முதலிய மேள வகைகளின் இசை என, அனைத்து இசைகளையும் விவரிக்கிறார்.
நாட்டுப்புறப் பாடல்களை வாழ்த்துப் பாடல்கள், ராப்பாடி, வில்லுப்பாட்டு, பொலிப்பாட்டு என்ற வகையிலும், நாட்டுப்புற ஆட்டங்களை ஒயில், கழியல், கும்மி, கோலாட்டம், தப்பு, கால்மாறாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், ஆலி, கரகம், காவடி, காளி, குறவன் – குறத்தி, சதுர், சாமி, சேத்தாளி, புலி, மயில், மாடு, ராஜா – ராணி ஆட்டங்கள் என்ற வகையிலும், நாட்டுப்புறக் கூத்துக்களைக் கணியான் கூத்து, தோல்பாவைக் கூத்து, கைசிக புராணக் கூத்து, நாடகங்கள், தெருக்கூத்து என்ற வகையிலும், வீரக்கலைகளைச் சிலம்பாட்டம், சல்லிக்கட்டு, சேவல் கட்டு, தேங்காய்ப் போர் என்ற வகையிலும், சடங்குகளைச் சம்ஹாரம், சூரசம்ஹாரம், குலசை முத்தாரம்மன் மகிஷாசுர வதம் என்ற வகையிலும் மிகவும் விரிவாக நம்முன் காட்டுகிறார்.
கைவினைக் கலைகள் மண், மரம், கல், உலோகம் என்ற நிலையில் விரிந்து செல்கின்றன. இவை தவிர ஓவியக்கலை, ஒப்பனைக் கலை, அலங்காரக் கலை குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன. கலை மட்டுமின்றி, அக்கால மக்களின் வாழ்வியலையும் படம் பிடித்து காட்டுகிறது இந்த நூல். நெல்லையில் வாழ்ந்த பல கலைஞர்களின் பெயர்கள் இந்த நூல் வழி தெரியவருகிறது. சான்றாக, பத்தமடையைச் சேர்ந்த பாய் நெசவாளர்கள் பலரும், கலைநயம் மிக்க பாய்களைத் தயாரித்து வந்த போதிலும், இதுவரை இப்ராஹிம் பீவி எனும் ஒருவர் மட்டுமே, 1992ம் ஆண்டிற்கான சிறந்த கைவினைக் கலைஞருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் என்ற செய்தியைக் கூறலாம். இந்த கலைகளின் இன்றைய நிலை என்ன என்பதையும் சுட்டிக் காட்டி முடிக்கிறார் நூலாசிரியர். உழைப்பின் அருமை, தொகுப்பில் தெரிகிறது.
முனைவர் இராஜ. பன்னிருகைவடிவேலன்