சமூகத்தில், நன் மதிப்பை பெற்றவர்களே, இதுவரை தன் வரலாறுகளை எழுதியுள்ளனர். அல்லது அவர்களின் வரலாறுகளை மட்டுமே நம் சமூகம் படித்துப் பழகியிருக்கிறது. ஆனால், கேரளாவின் புகழ் பெற்ற திருடன் தன் கதையை சொல்வது தான் இந்த புத்தகம்.
கேரளாவின் வாழத்துங்கல் என்ற கிராமத்தில், 1950-ல், மணியன்பிள்ளை பிறந்தார். 11வது வயதில் தந்தை இறப்பால், வறுமை ஏற்படுகிறது.
16வது வயதில், முதல் திருட்டு. சட்டைப் பையில் 30 காசு இருந்ததால், 17 வயதில் போலீசாரால் பிடிக்கப்பட்டு, 18 வயது என, நீதிமன்றத்தில் சொல்ல வைக்கப்பட்டு, ஆறு மாத சிறைத்தண்டனை பெறுகிறார். இது, கேரளாவின் புகழ்பெற்ற திருடன் மணியன்பிள்ளை உருவான கதை. 1967--ல் ஆரம்பித்த திருட்டு வாழ்க்கை, 1995ம் ஆண்டு வரை தொடர்கிறது.
சமூகத்தில் யார் நிஜமான திருடன் என்ற கேள்வியை, மணியன் பிள்ளை ஒவ்வொரு சம்பவத்தை விவரிக்கும் போதும், ஓயாமல் எழுப்பி கொண்டே இருக்கிறார்.
திருட்டு பொருளை தன் வீட்டுக்கு எடுத்து செல்லும் போலீஸ்காரர்கள்; கஸ்டடியில் உள்ள கணவனை காண வரும் திருடனின் மனைவியை பயன்படுத்தும் போலீஸ்காரர்கள்; பாலியல் தொழில் செய்யும் பெண்ணை பயன்படுத்திவிட்டு, சித்ரவதை செய்யும் போலீஸ்காரர்கள்; கைதிகளுக்கான உணவு பொருட்களை திருடும் போலீஸ்காரர்கள். திருட்டு பொருட்களை வாங்கி கோடீஸ்வரன் ஆனவர்கள்; அறிவை பயன்படுத்தி கோடிக்கணக்கில் திருடும் பெரும் திருடர்கள்; வரி ஏய்ப்பு முதலாளிகள். இவர்களில் யார் திருடன்? நம் சமூகத்தில் யார் குற்றவாளி?
மணியன் பிள்ளை இப்படியான கேள்விகளை கேட்பதற்காகவே தன் கதையை சொல்லியுள்ளார் என, நினைக்க வைக்கிறது இந்த புத்தகம்.
காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஒரு மனிதனை குற்றவாளியாக மட்டுமல்ல, எளிதில் நிரந்தக்ர குற்றவாளியாகவும் ஆக்கி விடுகின்றன.
சிறை, பெரும் திருடர்களின் கூடாரமாக இருப்பதால், ஒரு மனிதனுடைய மன இயல்பை மாற்றுகிறது. சட்டம், ஒரு மனிதனுடைய உடலைத் தான் ஜெயிலுக்குள் அனுப்புகிறது. மனதை அல்ல. தவறான வாழ்க்கைக்குள் மனிதர்களை தள்ளிக் கொண்டேயிருப்பது எது? இதுதான் திருடன் மணியன் பிள்ளையின் கேள்வி.
இப்படியான கேள்விகளை தொடர்ந்து கேட்பதால், திருடன் மணியன் பிள்ளை கலகக்காரன் ஆகிறார். தன் கதையை சொல்வதினுாடே சமூகம், நீதியமைப்பு ஆகியவற்றை கேள்விக்கு உட்படுத்தி, விமர்சிக்கிறார். கேள்விகளும், விமர்சனங்களும் சேர்ந்து, திருடன் மணியன் பிள்ளையின் தன் வரலாற்றை உயிர்பெறச் செய்துள்ளன.
பிரபாகரன்