தி.மு.க., தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம், அதன் பின்னர் அரங்கேறிய அத்துமீறல்களை இந்த நூல் விரிவாக பதிவு செய்துள்ளது. சமீப காலத்தில் நடந்த இந்த மிக முக்கியமான அரசியல் நிகழ்வை, விறுவிறுப்பாகவும் கோர்வையாகவும்
நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
இதில் விவரிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் நிருபராக நானும் களத்தில் இருந்தேன். அந்த காட்சிகள் என் கண் முன்னே இன்றும் நிழலாடுகின்றன. தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில், கருணாநிதியின் வீட்டை உடைத்து, போலீஸ் அதிகாரிகள் உள்ளே புகுந்து அவரைக் கைது செய்தனர். முதியவர் என்றும் பாராமல் கையை பிடித்து தூக்கியதையும், படி வழியே தரதர என்று இழுத்து சென்றதையும் நேரடி விவரணையோடு நூல் குறிப்பிடுகிறது.
அத்தகைய சர்வாதிகார நடவடிக்கை, பழிவாங்கும் மனநிலையில் இருந்து உருவாகியிருக்க வேண்டும். முன்பு ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது ஆளுனரின் அனுமதி, நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால் கருணாநிதி கைதின் போது அத்தகைய சட்ட நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டிருந்தன.
மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாயினர். டி.ஆர்.பாலு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். கருணாநிதி கைது நடவடிக்கையை கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். அதை படம் பிடித்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காலம் அது. அதை எதிர்த்து பத்திரிகை உலகம் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியது.
சமகால வரலாறு என்றாலும் சில தகவல்களை ஆவணப்படுத்துவது வரவேற்கத்தக்கது. கருணாநிதி கைதை எதிர்த்து தலைவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கைகள், பத்திரிகை தலையங்கங்களை தொகுத்து கொடுத்துள்ளார், நூலாசிரியர். தமிழக வரலாற்றில் அந்தக்காலகட்டம் போன்று, மேலும் சில சர்வாதிகார செயல்பாடுகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்தேறியுள்ளன. அவற்றையும் பதிவு செய்து வெளியிட்டால் வரவேற்கலாம்.
மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி