புல், பூண்டு, புதர், செடிகொடி, மரம் ஆகியன எல்லாமும் தாவரங்களே. தாவரம் என்றால், இடம்பெயராமல் ஊன்றி நிற்பது என்பது பொருள். தாவரங்களுக்கும் ஐம்புலன்கள் உள்ளன. தொட்டு, பார்த்து, முகர்ந்து, ருசித்து, கேட்டு வாழ்கின்றன. அதனால், அவற்றை ஓரறிவு உயிரி என்பது அவ்வளவு பொருத்தமில்லை.
தாவரங்களை வழக்கமான பாடப்புத்தகக் கோணத்தில் இருந்து பார்த்தால் அத்தனை சுவாரசியம் இருக்காது தான். ஆனால் மனித உள்ளத்தின் கோணத்தில் இருந்து பார்த்தால், நம்மைப் போலவே அவையும் உலகில் வாழத் துடிக்கும் உயிரினமாகத் தெரியும். அப்போது அதிசயமான பல உண்மைகள் வெளிப்படுகின்றன. அவற்றிடமும் தந்திரங்கள், களவு, கற்பு போன்ற மனித குணங்கள் ரகசியமாகப் பரிணாமம் அடைந்திருப்பது தெரியும் என்கிறார் நூலாசிரியர்.
தாவரங்கள் பேசிக் கொள்கின்றன. அவற்றுக்கும் தாய்ப்பாசம், தோழமை, பகைமை உணர்வுகள் உண்டு. மிருகங்களுடனும், பூச்சிகளுடனும் அவை போர் தொடுக்கின்றன.
அவற்றினிடையேயும் நிலத் தகராறு, வர்த்தகத் தகராறு உண்டு. அடித்து, இடித்து, முந்தித் தள்ளி வாழ்க்கை நடத்துவதில்
விலங்குகளுக்கு சளைத்தவை அல்ல அவை.
தெரியுமா...? இலைகள் மூலம் தாவரங்கள் காண்கின்றன; வேர்கள் மூலம் சத்தங்களை கேட்கின்றன; இரவு, பகல், அமாவாசை, பவுர்ணமி, தட்சிணாயனம், உத்தராயணம், நால்வகைப் பருவங்களை, சூரிய ஒளியின் அளவை வைத்து அறிகின்றன; 13 வகை உலோகத் தாதுக்களை மற்ற தாதுக்களில் இருந்து பிரித்தறிகின்றன. இது அவற்றின் சுவை அறிவுக்குச் சாட்சியம். விஷத்தன்மை கொண்ட பாதரசம், கேட்மியம், ஈயம் போன்ற உலோகங்களை தவிர்க்கின்றன. தேவையான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுகின்றன.
வேர்கள் தான் அவற்றின் சுவை அரும்புகள். மலர்கள் தாம் அவற்றின் பாலுறுப்புகள். தங்கள் இனவிருத்திக்கு மலர்களைக் கொண்டு தாவரங்கள் செய்யும் சாகசம் அநேகம். மேலே குறிப்பிட்டவை எவையும் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை அல்ல. பற்பல சோதனைகள், ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட அறிவியல் உண்மைகள். அவற்றை எல்லாம் மிக விரிவாக எழுதி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் நூலாசிரியர். இத்தனையையும் தனது நகைச்சுவை நடையில் எழுதி பரவசப்படுத்துகிறார். மிக அருமையான, அனைவரும் படித்து ரசிக்க வேண்டிய நூல்.
மயிலை சிவா