இந்த நூலில், வி.சி., கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்., கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், மார்க்.கம்யூ., கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., கட்சியின் இரா.முத்தரசன், ம.ம.க.,வின் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க.,வின் மாசிலாமணி ஆகியோரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய மூன்று கட்சிகள்தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருக்கின்றன. விளைவாக, நிலவியல், சமூக ரீதியாக தமிழகத்தில் பல்வேறு பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளுமே நிலவுகின்றன.அதற்கு ஒரே தீர்வு, அனைத்து சமூக குழுக்களுக்கும், சரிவிகிதமாக அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது தான், இந்த நூலின் சாராம்சம். இதுவரை மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, ஒற்றைக் கட்சி ஆட்சி என்பது, அநேகமாக பெரும்பான்மை வாத, ஆணவ போக்கு கொண்ட ஆட்சிகளாக மாறி விடுகிறது என்பதை வரலாற்று ஆதாரங்களோடு முன்வைக்கின்றனர் கட்டுரையாளர்கள். இந்திய ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்த, அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்துவதற்கு, கூட்டணி ஆட்சி முறை ஒன்றுதான் வழி என்பதற்கு இந்த நூலில், வலுவான வரலாற்று ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன.
சலீம்