இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் இருந்து சென்று வேலை செய்த, மலையகத் தமிழர்களின் பிரச்னைகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. 1936ல், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, அப்போதைய இந்திய பிரிட்டிஷ் அரசு, கும்பகோணத்தில் பணியில் இருந்த ஏ.விட்டல்பாய் என்ற ஐ.சி.எஸ்., (இப்போதைய ஐ.ஏ.எஸ்.,சுக்கு சமம்) அதிகாரியை இலங்கைக்கு அனுப்புகிறது. 1940ம் ஆண்டு வரை அவர் ஆற்றிய பணிகள், எதிர்கொண்ட சிக்கல்கள், பிரச்னையின் தீவிரம் குறித்து, இந்த நூல் விவரிக்கிறது.
நூலாசிரியரும், விட்டல்பாயின் மகளுமான சாரதா நாயக், தமது 4வது வயதில், 1936ம் ஆண்டில், தந்தையோடு இலங்கைக்கு சென்றார். பின், டில்லி, சென்னை பல்கலைக்கழகங்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்து பிரையர்கிளிப் கல்லுாரி ஆகியவற்றில் பயின்றவர். சர்வதேச கல்வி நிறுவனங்களில் பணியாற்றி, தற்போது டில்லியில், ‘எஜுகேஷனல் ரிசோர்சஸ் சென்டர்’ என்ற அமைப்பை நிறுவி, விளிம்பு நிலை மாணவர்களுக்காக கல்வி பணியாற்றி வருகிறார்.
கடந்த, 1834ம் ஆண்டில், உலகளவில் அடிமை முறை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஆங்கில, பிரெஞ்சு காலனியாதிக்கங்கள், குறைந்த கூலியில் வேலையாட்களை நியமிக்க, ஒப்பந்த முறையை கண்டுபிடித்தன. அதுவும் ஒருவகை அடிமை முறை தான்.
பஞ்சம் பசியால், இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர், உலகின் பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வகையில், இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்ற, லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு சென்றனர்.
ஒப்பந்தமும், சட்டமும் ஆளும் பிரிட்டிஷாருக்கு சாதகமாகவே இருந்தன. கூலியாட்களை அழைத்து சென்ற ஏஜென்டுகளும் முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
குடியகல்வு முறைக்கான (இமிகிரேஷன்) சட்டம் வந்த பின், புலம் பெயர்ந்தோர் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள, ‘ராஜ் ஏஜென்ட்’ என்ற அதிகாரியை, இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் அரசு, 1923ம் ஆண்டில் நியமித்தது. அதன் செயலகம் கண்டியில் இருந்தது. 1935ம் ஆண்டுப் புள்ளிவிவரங்கள் படி, 7,75,000 இந்தியர்கள் இலங்கையில் புலம் பெயர்ந்தவர்களாக இருந்தனர். இலங்கை நாட்டின் ஜனத்தொகையில் அது, 17 சதவீதம்.
ஆனால், இலங்கையில் அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்களில், 50 சதவீதம் பேர் அங்கேயே பிறந்தவர்கள். அங்கிருந்த, 5,57,000 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களில் அவர்கள் வேலை செய்தனர். அவற்றில், 95 சதவீத தோட்டங்கள், பிரிட்டிஷாருக்கு சொந்தமானவை.
ஆங்கில முதலாளி வர்க்கம் தமது உடைமைகளைக் காத்துக் கொள்ள வசதியாகச் சட்டங்களை அமைத்துக் கொண்டது. பாரம்பரிய உரிமையைக் (எத்னிக் ரைட்ஸ்) காக்கக்கூடிய சட்டங்கள் இந்தியர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. விட்டல்பாய், 1938, டிசம்பர், 5ம் தேதியிட்ட கடிதத்தில் இதைப் பற்றி விமர்சித்து எழுதினார். அச்சட்டங்களால் இந்தியர்கள் எதிர்கொள்ளக் கூடிய இன்னல்களை அன்றே அவர் எடுத்துரைத்திருந்தார்.
அதேபோல கண்டபோலா சம்பவமும் புலம் பெயர்ந்தோருக்கு எதிராகவே அமைந்தது. முதன்முறையாக, 1937ல், நுவாரா எலியா என்ற இடத்தில் கோல்ப் விளையாடச் சென்ற அன்றைய வேளாண் மந்திரி டி.எஸ்.சேனநாயகா, கண்டபோலா என்ற இடத்தில் சில தமிழர்கள், விவசாயத்தில் ஈடுபட்டிருந்தது கண்டு ஆத்திரமடைந்து, அவர்களை அங்கிருந்து உடனே அகற்ற உத்தரவிட்டார். தமிழர்களோ அந்நிலங்களை சில தலைமுறைகளாக உழுது கொண்டிருந்தனர். இதுகுறித்து விட்டல்பாய் அரசுடன் விவாதித்தார்.
இந்திய அரசுக்கும் எழுதி, சென்னையில் மக்களவையில் விவாதிக்க வித்திட்டார். அதன் விளைவாக, 1938, மே மாதம், தமிழர்களை அங்கிருந்து அகற்றும் இலங்கை அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தியர்கள் அல்லற்படுவதை நேரில் கண்டறிய, காங்கிரஸ் கட்சி சார்பில், 1939, ஜூலையில், நேரு இலங்கை சென்றார். விட்டல்பாய் அவரை அழைத்துக் கொண்டு ஒன்பது நாட்கள் பயணித்து, தமிழர்களின் அவல நிலையை விளக்கினார்.
அதன் பின், அவர்கள் இருவருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து இந்த நூலில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்துக்கு, நேரு எழுதிய கடிதமும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம், 46 முக்கிய அம்சங்கள் தரப்பட்டுள்ளன. அதை விவாதித்த காங்கிரஸ் கமிட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது.
இலங்கையில், 1930களில் சிங்களர்கள் அல்லாத பிறர், 35 சதவீதம் இருந்தனர். ஆனால் மாகாண கவுன்சிலில் சிங்களர்களின் பிரதிநிதித்துவம், 80 சதவீதமாக இருந்தது. சிறுபான்மையினர் (இந்தியர்கள் உட்பட) இதை கடுமையாக எதிர்த்தனர்.
கடந்த, 1928ம் ஆண்டில் டொனோமோர் கமிஷன் அறிக்கை வெளியான பிறகே, இலங்கையின் இந்திய எதிர்ப்பு மனநிலை உருவானது என்கிறார் நேரு. இலங்கை, இந்திய எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டது என்றும், அதன் முதல் பலி, இலங்கை அரசில் கூலிகளாகப் பணியாற்றிய தொழிலாளர்கள் தான் என்றும் நேரு குறிப்பிடுகிறார்.
அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கத்திற்குப் பின், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல்கள் தொடங்கின. அதிக எண்ணிகையிலான இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கினால், தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விடும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.
முதலில் இது ஒரு அரசியல் பிரச்னையாகவே இருந்தது. ஆனால், ‘இலங்கை இதை பொருளாதாரப் பிரச்னையாக திரிக்கிறது’ என்று நேரு தமது அறிக்கையில் பதிவு செய்கிறார்.
‘கிராம சபைகளைப் பொறுத்தவரை இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்று தனிப்பட்ட கமிட்டிகள் ஏற்படுத்த ஆவன செய்ய வேண்டும்’ என்று நேரு வலியுறுத்துகிறார். இன்னும் பல முக்கிய அறிக்கைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அன்றிலிருந்தே இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்ட சேனநாயகா, பண்டாரநாயகா பேச்சுகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக பண்டாரநாயகா, ‘கடைசி இந்தியன் இந்நாட்டின் கரையை விட்டு அகலாத வரை என் மனம் நிம்மதியுறாது. அப்படிச் சென்றால் தான் என்னால் சந்தோஷமாகச் சாக முடியும்’ என்று கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை பொருளாதார ரீதியில் வளம்பெற, தமிழர்கள் அளித்த பங்களிப்பை, சிங்களர்கள் மறந்து விட்டனர். இலங்கையில், தமிழர்களுக்காக ஒரு பள்ளி நடத்திக் கொண்டிருந்த பி.டி.ராஜனுடன் விட்டல்பாய் நட்புடன் பழகினார். ராஜன், ‘தமிழர்கள் இங்கு அடிமைகள் போலத்தான் வாழ்ந்தனர்’ என்றார். ராயல் கமிஷன் விசாரணை செய்தபோது ஒரு பெரிய மனிதர் அளித்த வாக்குமூலத்தில், ‘இலங்கை வாழ் தமிழன் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலேயே சாகிறான்’ என்றார். தமிழர்கள் இலங்கையில் பணம் சம்பாதித்து, அங்கு செலவழிக்காமல் தமிழகத்திற்கு அனுப்பி விடுகின்றனர் என்பது சிங்களர்களின் குற்றச்சாட்டு. அது முற்றிலும் பொய் என்பதை அஞ்சல் அலுவலக புள்ளிவிவரங்கள் மூலம், மூதறிஞர் ராஜாஜி நிரூபித்ததும் இந்த நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் குறித்து ஆய்வு செய்வோருக்கு இந்த நூல் குறிப்பிடத்தக்க ஆவணம்.
தொடர்புக்கு: narasiah267@gmail.com
– நரசய்யா