பேஸ்புக். இதில் எழுதி எழுத்தாளர் என்ற பெயர்ப்பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டவர்களைத் தெருவெங்கும் பார்க்கலாம். எழுத்தாளர் என்ற ஹோதாவை எப்போதோ அடைந்துவிட்டவர்கள் பேஸ்புக் என்னும் நடைமேடையில் எழுத வருவது எதற்காக?
காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நமக்குக் கிடைப்பது சுவாரசியம். அது போதாதா?
நேக்குத் தெரிந்த எழுத்தாளர்; நறுவிசாகச் சொற்கள் வைத்திருப்பவர். பேஸ்புக் வட்டாரத்துக்குள்ளே நுழையும்போதே, அங்கே யூத் கூட்டம் கும்மியடிப்பதை அவதானித்துவிட்டார் போலும். விடலைத்தனமான பேச்சில் ஆரம்பிக்கிறார். ‘அப்போது 24, 25 வயது. பஸ்ஸில் லேடீஸ் சீட்டில் ஒரு கவிதையைச் சொருகி விடுவேன். நீ ஒரு தாமரை/ தினம் தொடும் தூரத்தில்/ சிரித்துக் கொண்டிருக்கிறாய்/பேசிச் சிரிக்கப் பேராசை ஆனால்/ என் சுமை எனக்கு/ உன் கண்ணில் உன் சுமை/ கலைப்பது மடமை/இக்கவிதை நீ படிப்பதே
கை குலுக்குவது போல/ நாளை சிவப்பில் வர இயலுமா/ கருப்புத் தாமரை பூமியில் இல்லையே’ மறுநாள் அந்தப் பெண் சிவப்பு உடையில் வந்ததாம். இப்படி ஒரு சம்பவத்தில் தொடங்கி, தன் தற்போதைய மனநிலையான தத்துவ விசாரத்துக்குள் புகுந்து விடுகிறார் பாலகுமாரன்.
‘கோவில்கள் ஆன்மிகத்தில் ஆரம்ப இடம்’ என்று ஒரு சரேல் வாக்கியத்தை வீசுகிறார். ‘நிருபர்கள் தியானம் செய்ய வேணும்; வெறும் பேச்சு மகாபாவம்’ என்று அதிரடி சரவெடி பற்ற வைக்கவும் தவறுவதில்லை.
சினிமாவில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். அதைத் தொடர்ந்து, தான் கண்டுகொண்ட உண்மை என்பது போல ஒரு வடிவத்தில் சில செய்திகளைச் சொல்கிறார். எல்லாம் பேஸ்புக் கொடுக்கும் வார்த்தை அளவுக்குட்பட்டு. அதுவே ஒரு சுவையான வாசிப்பைக் கொடுத்து விடுகிறது.
போகிற போக்கில், 24 பக்கத்துக்கு ஒரு நீண்ட கவிதை (அல்லது செய்யுள்) எழுதிச் செய்திருக்கிறார். ஆன்மிகம், தத்துவம், மருத்துவம், சுகாதாரம், அறிவுரை என்று சித்தர்நெடி அடிக்கும் வரிகள்.
‘பற்பசை வேண்டாம் பலாமுரி வேரை
பதமாய்ச் சுட்டு பாதாம் பிசினொடு
கலக்க அரைத்து காலை மாலை
தினசரி தேய்க்க வாய்க்குள் மின்னல் வருமே’
பாலகுமாரனுக்கு என்று ஒரு வாசகர் கூட்டம் உண்டு. இப்போது பேஸ்புக் பேட்டையில் புது ஆட்கள் கூடியிருக்கிறார்கள். அந்த இருதரப்பாரும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
தன் பேஸ்புக் பக்கத்தில் கமென்ட் போட்டவர்களில் அநேகமாக எல்லார் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இந்த நூல் ‘சேகரிப்பாளர் ஐட்டம்’. நூலின் பிற்பகுதியில் ஆன்மிக அன்பர்களுக்காக சேர்க்கப்பட்டிருக்கும் சாமி பாட்டுகள் போனஸ்!
- ராமேசன்