மிக சுவாரசியமான புத்தகம். சின்ன அண்ணாமலை சுதந்திரப் போராட்டங்களில் பங்குகொண்டு பலமுறை சிறை சென்றவர். ராஜாஜியுடன் நட்பு பாராட்டியவர். கல்கியுடன் நெருக்கமான நட்புடையவர். சிறந்த பேச்சாளர். இவரது நகைச்சுவை உணர்வே இவரது பலம். காந்தியை தன் தலைவராகக் கொண்ட இவர் தீவிர காங்கிரஸ்காரர். மேடைகளில் ஈ.வெ.ரா.,வை எதிர்த்து தீவிரமாகப் பேசியவர். இவரும் ம.பொ.சியும் 1960களில் பல மேடைகளில் தி.மு.க.,வை தீவிரமாக எதிர்த்து வந்தார்கள்.
சின்ன அண்ணாமலை தன் வாழ்க்கை யின் சுவையான குறிப்புகளை, எளிய தமிழில் நகைச்சுவை ததும்பும் வார்த்தைகளில் எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். புத்தகம் நெடுக பல்வேறு குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன.
விடுதலைப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற நடிகர்கள் பற்றிய சில நினைவுகள், காந்திஜி பற்றிய சில தெறிப்புகள் எனப் பலவகையான பதிவுகள் இதில் உள்ளன. குறிப்பாக, ராஜாஜி – காமராஜ் பற்றி இவர் எழுதியிருப்பதன் வாயிலாக, நமக்குள் உருவாகும் ஒரு சித்திரம் மிகவும் முக்கியமானது.
படிப்பவர்கள், மென்நகை புரியும்வண்ணம் பல வரிகள் இந்நூலில் காணப்படுகின்றன. அண்ணாதுரை முதல் பலர் அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தபோதும் இவரது பேச்சில் உள்ள நகைச்சுவையைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது இந்நூலில் பதிவாகியுள்ளது.
சில இடங்களில் சின்ன அண்ணாமலை செய்யும் விளையாட்டுத்தனமான செய்கைகள் இவரைப் பற்றிய வினோதமான சித்திரத்தைத் தருகின்றன. குறிப்பாக தாராசிங் – கிங்காங் குத்துச் சண்டையில் அதிக வசூல் வரவேண்டும் எனபதற்காக, போட்டிக்கு சில நாள் முன்பாக இவர் சொல்லி வைத்து ஏற்பாடு செய்யும் போலிச் சண்டை. இப்படியும் செய்வார்களா என்று படிப்பவர்களை அசர வைக்கிறது. ஆனால் உண்மையில் அப்படி நடந்திருக்கிறது. அதைச் செய்தவரே அதைப் பதிவு செய்திருக்கிறார்.
காங்கிரசைக் காப்பாற்ற சிவாஜி கணேசனின் ரசிகர்கள் காங்கிரசுக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி, காங்கிரசுக்காக இவர் செய்த காரியங்களைப் பட்டியலிட்டு முடியாது. ஆனால் ராஜாஜி காங்கிரசில் இருப்பதை விரும்பாத காமராஜர், ராஜாஜி முதல்வர் ஆனதும், தி.மு.க.,வின் எதிர்ப்பிரசாரத்துக்கு எதிராக எதையும் செய்யாமலிருப்பதை இவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இத்தனைக் கும் காமராஜர் மீது மாறாத அன்பும் மரியாதையும் உடையவர். ஆனாலும் காங்கிரசைக் காப்பாற்ற ராஜாஜிக்கு ஆதரவாக ம.பொ.சி.,யுடன் இணைந்து காமராஜுக்கு எதிராகப் போகிறார். பின்னாளில் அதே ம.பொ.சி.,யும் ராஜாஜியும் தி.மு.க.,வுடன் இணைந்து காங்கிரசை தமிழ்நாட்டில் பலவீனமடையச் செய்த முரணையும் பதிவு செய்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, பட்டப்பகலில் சுதந்திரப் போராட்ட தியாகி கள் சிறையைத் தகர்த்து இவரை விடுவித்ததை விலாவாரியாக எழுதி இருக்கிறார்.
இதுபோன்று பட்டப்பகலில் சிறை உடைக்கப்பட்டு கைதி ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் விடுவிக்கப்பட்டதே இல்லை என்றும் குறிப்பிடுகிறார். காந்திஜியின் ‘ஹரிஜன்’ இதழை தமிழில் கொண்டு வருகிறார். தமிழ்ப்பண்ணை என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுகிறார். ம.பொ.சி.,யின் விற்காத புத்தகம் ஒன்றை மொத்தமாக வாங்கி, அட்டையை மாற்றி நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டு விற்றுக் காண்பிக்கிறார். வ.உ.சி., பற்றிய அதே புத்தகத்தை ம.பொ.சி.,யை வைத்து விரிவாக எழுத வைத்து அதிக விலையில் மீண்டும் வெளியிடுகிறார்.
மலேசியாவில் தன் நகைச்சுவை உணர்வால் தப்பிப்பது, எழுத்தாளர் நாடோடியாக நடித்து கடைசியில் தானே ஏமாந்து போவது, வீரபாண்டிய கட்டபொம்மன், திருடாதே, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் இவரது பங்களிப்பு, அண்ணாதுரையுடன் ரயிலில் பயணம் செய்தபோது நடந்த பேச்சுகள், ஈ.வெ.ரா., முன்னிலையிலேயே அவரை விமர்சிப்பது என, பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்துநேசன் பற்றிய ஒரு கட்டுரையில் ‘அஞ்சலிக்கு அது இருக்கா’ என்பது தொடங்கி, அதை ராஜாஜி எதிர்கொண்ட விதம் வரை, தொடர்ச்சியாக எல்லா மஞ்சள் பத்திரிகைகளும் ஒழிக்கப்பட்டது வரை வரும் கட்டுரை, ரசனைக்குத் தீனி இடும் ஒன்று.
சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டது, அறுபதுகளின் அரசியல் பங்களிப்பு, அறுபதுகளின் திரைப்படங்கள் எனத் தொடர்ச்சியாக வரும் விவரங்கள் சலிப்பில்லாத தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்று சொல்லி பல விஷயங்களைப் பதிவு செய்யும், காவி கதர் உடை அணிந்து வாழ்ந்த ஒரு தேசப் பற்றாளரின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, அது இத்தனை சுவாரசியமாக இன்றும் விரைவாகப் படிக்கும் தமிழில் இருக்கும் என்பதை, படித்தால் நம்பிவிடுவீர்கள்.
தொடர்புக்கு: haranprasanna@gmail.com
– ஹரன் பிரசன்னா