‘எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால், அதற்குக் காரணம் நான் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பது தான்’ (பக்.80) என்று பெருமையுடன் கூறும் நூலாசிரியர், தினமணி நாளிதழில் எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘அவர்கள் குரல்களைக் கேளுங்கள். அவை நம்பிக்கையின் சவங்களுக்கு ஊதும் சங்கா இல்லை சமூகத்தை உறக்கத்தில் இருந்து எழுப்பும் நாதமா’ (பக்.30) என்று, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நியாயத்தை எடுத்துக் காட்டும் இவர், ‘இரவுமில்லாத, பகலுமில்லாத மாலைப் பொழுது அழகு என்கிறீர்களே! அப்படித் தானே நாங்களும். எங்களை மட்டும் ஏன் வெறுக்கிறீர்கள்’ (பக். 72) என்னும் திருநங்கைகளின் சோக வாழ்க்கையையும் அணுகியுள்ளார்.
‘நம் நாட்டிலும் மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் நேரத்தை இலவச சட்ட உதவிக்கு ஒதுக்கி முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் இலவச சட்ட உதவி உண்மையான உதவியாக விளங்கும் (பக்.167)’ என அறிவுறுத்தும் நூலாசிரியர், தன் நீதிமன்ற அனுபவங்களைப் பல கட்டுரைகளில் முக்கியத்துவம் பெறச் செய்துள்ளார்.
‘பாரம்பரிய அறிவு வளர்ச்சி’யை வலியுறுத்தி, ‘நோ வார்டிஸ்’ மருந்து நிறுவன வழக்கையும் சமுதாயப் பொறுப்புடன் விளக்கி உள்ளார்.
‘தொலைக்காட்சிப் பெட்டி யும், கணினியும் குழந்தைப் பருவம் என்னும் விலை மதிக்க முடியாத செல்வத்தைத் திருடிவிட்டன’ (பக்.238) என்று ஆதங்கப்படும் நூலாசிரியரின் ஒவ்வொரு கட்டுரையும் அவரது ஆழ்ந்த அனுபவ அறிவையும், அக்கறையையும் காட்டுகின்றன.
மனிதன் தன் இனத்தைத் தானே ஆக்கிரமிப்புகள் மூலம் அழித்துக் கொள்கிறான். கரப்பான் பூச்சிக்கு எக்காலத்தையும் தாக்குப் பிடிக்கும் தன்மை அதிகம் உண்டு. ஆனால், மனிதனுக்கில்லை.
‘இயற்கையை அழித்து அதன் விளைவினால் மனித இனம் போனபின் நிசப்தமான அந்தக் கல்லறை உலகில், கரப்பான் பூச்சி நகைக்குமோ?’ என்னும் வரிகள் (பக்.69) ஆழமானவை. இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு செய்தி உள்ளீடாக அமைந்துள்ளது நூலுக்குச் சிறப்பு.
பின்னலூரான்