பிரம்மத்தை அறியும் ஞானத்தை விளக்குவது, நான்கு வேதங்களின், 108 உபநிடதங்கள். அவற்றில், ஈச, கேன, தைத்ரீயம் முதலிய 10 உபநிடதங்கள் முக்கியமானவை. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலின் முதற்பாகம் வந்தது. இரண்டாம் பாகமான இந்த நூலில், ஈசாவாஸ்யம், கேனம், மாண்டூக்யம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதர்வண வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில் தான், ‘சத்யமேவ ஜயதே’ எனும் வாசகம் உள்ளது.
அது, இந்திய அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ளது. கோவில், பூஜை, பரிகாரம் என்ற அளவில் முடிவது அல்ல ஆன்மிகம்; ஆத்ம சக்தியை உணரும் வரை அது தொடர வேண்டும் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம். அதை பழனி திருப்புகழால் விளக்கி இருப்பது சிறப்பு.
திருக்குறள், திருப்புகழ் உதாரணங்களால், திரையிட்டு மறைத்த கருத்துகளை வெளிப்படையாக விளங்க வைக்கிறது இந்த நூல்.
பெரிய அரிய உபநிடதங்களை அழகாக விளக்கும் சிறிய தங்க குங்குமச் சிமிழ் நூல் இது.
முனைவர் மா.கி.ரமணன்