கைகளில் தவழும் கனச்செவ்வக திரைப்படம் எனலாம். கறுப்பு – வெள்ளை ஓவியங்களின் பிரத்யேக தாக்கமும் அழுத்தமும் நிரம்பியதாய் இந்த சித்திரக் கதை வாசிப்பு உள்ளது. மொத்தம் 226 பக்கங்களாக நீளும் சித்திரப் பயணத்தில், கெளபாய் கதைகளுக்கே உண்டான 20ம் நூற்றாண்டின் துவக்க காலமும் டெக்சாஸ், மெக்ஸிகோ, கொலராடோ போன்ற நிலவெளிகளின் பாலைத்தன்மையும் ஒவ்வொரு பக்கங்களிலும் நம்மை ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.
தலையில்லாமல் (!?) குதிரையில் அலையும் ஒரு போராளியின் மர்மத்தை, தொடர்ந்து செல்லும் ஒரு கெளபாயின் சாகசம் இது. டெக்ஸ் வில்லர் கதைகளுக்கே உரித்தான, செவ்விந்திய முகங்கள், தென் அமெரிக்க சமவெளிகள், குதிரை, துப்பாக்கி முழக்கங்கள் போன்ற கெளபாய் தோரணங்களோடு, தலையில்லாத போராளி என்ற மர்மமும் இணைந்து மிரட்டுகிறது.
கதையெழுதியிருப்பது மெளரோ போசல்லி என்ற இத்தாலிக்காரர். ஓவியங்கள் பேபியோ சிவிடெல்லி. ஒரு சிறந்த கெளபாய் திரைப்படம் தரும் எழுச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் கதையை அமைத்திருப்பது இதன் சிறப்பு எனலாம்.
பல நிலவெளிகளுக்கு ஊருடுவும் நீள் பயணங்கள், செவ்விந்திய வட மற்றும் தென் அமெரிக்க முகங்கள், ஈர்ப்புமிக்க வசனங்கள் மற்றும் செறிவான கதைப்புலம் என ஒரு திரைப்பட பிரம்மாண்டத்தை இச்சித்திரக்கதை பெறுகிறது.
பேபியோ சிவிடெல்லி-யின் கோட்டோவியங்கள், இந்த டெக்ஸ் வில்லர் கதைக்கு அழுத்தமான கறுப்புப் பின்னணியை கொடுத்திருக்கின்றன. கதைக்கருவான மர்மத்திற்கு உரு சேர்ப்பதுபோல் அது அமைகிறது. முக்கியமாக வெவ்வேறு கோணங்களில் காட்டும் டெக்சாஸ் பாலைவெளியும் பாத்திரங்களின் முகங்களும் என தூரிகை, கேமரா அவதாரம் எடுத்திருக்கிறது.
காமிக் வாசிப்பு நேசமிக்கவர்களுக்கு, அதிலும் டெக்ஸ் வில்லர் போன்ற கெளபாய் வகை சாகச விரும்பிகளுக்கு, இது சேமிப்புக்குரிய புத்தகம். சிறுவர்களின் இலக்கிய வாசிப்புக்கான திறவு கோல், காமிக்ஸ் புத்தகங்களே. தமிழ் இலக்கிய வாசிப்புக்கு இதுபோன்ற சித்திரக் கதைகள் ஒரு முகாந்திரம். இலக்கியம் என்றால் அது தாய்மொழி தவிர்த்த வேற்றுமொழி இலக்கியம்தான், முக்கியமாக ஆங்கிலம்தான் என்ற மாயை, சிறுவர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியப் பங்காற்றுவது சிறுவயதிலேயே அவர்களுக்கு கிடைக்கும் ஆங்கில மொழி காமிக்ஸ் புத்தகங்கள்தான்.
அதற்கு மாற்றாக சித்திரக் கதைகள் சிறுவயதிலிருந்து தாய்மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டால், தன்னார்வமாகவே அவர்கள் தாய்மொழி இலக்கியம் நோக்கி நகர்வார்கள்; வளர்வார்கள்; வளர்ப்பார்கள்.
தொடர்புக்கு: nathanjagk@gmail.com
– க.ஜெகநாதன்