ஆன்மிக நூல்கள் எழுதுவோரில் இரு வகை உண்டு. அதுவரை தான் படித்த, கேட்ட சம்பவங்களின் அடிப்படையில் மேற்கோள் குறிப்புகளை வைத்துக் கொண்டு தனது நடையில் புதிதாக ஒரு நூல் படைப்பது. இரண்டாவது ஊர்தோறும் பயணித்து தான் கண்டதை, உணர்ந்ததை, பார்த்து பரவசமானதை பக்தி ரசம் சொட்ட கூறுவது. ப்ரியா கல்யாணராமன் இதில் இரண்டாவது வகை. குமுதம் இதழில் அவர் தொடராக எழுதிய கோவில்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
இதில் மொத்தம், 17 கட்டுரைகள் உள்ளன. சென்னையில் தொடங்கி கேரளாவில் முடிகிறது நூலாசிரியரின் பயணம். ஆண்கள் பல்லக்கு தூக்கும் கோவில்கள் உள்ளன. ஆனால், சென்னை, நுங்கம்பாக்கத்தில் பெண்கள் பல்லக்கு தூக்கும் கோவிலைப் பற்றி இந்த நூலாசிரியர் தான் முதலில் குறிப்பிடுகிறார். இப்படி குடிகார கணவனை திருத்துவதற்கு ஒரு கோவில், சுகப்பிரசவம் நிகழ மற்றொரு கோவில், பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் தீர்க்க வேறொரு கோவில் என, பெண்களின் பிரச்னைகள் தீர இந்நூல் வழி வகுப்பதால், இதற்கான பெயர்க்காரணமும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது.
கோவில் திறக்கும் நேரம், ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் இருந்து கோவில் அமைந்துள்ள தூரம், கோவிலில் பூஜை நிகழும் சிறப்பு தினங்கள், தொலைபேசி எண்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் அந்தக் கோவிலுக்குச் செல்வதால் நமக்கு கிடைக்கக் கூடிய வரம் என அனைத்து புள்ளிவிவரங்களையும் இந்த நூல் உள்ளடக்கி இருக்கிறது.
‘புட்லூர் கோவிலில் பிள்ளைத்தாய்ச்சியாக அம்மன் படுத்திருக்கிறாள்’ என்பதை வாசிக்கும் கணத்திலிலேயே நம் மனக்கண்ணில் முட்டை கண்களும், பெருத்த வயிறுமாய் மஞ்சள் குங்குமத்துடன் அம்மன் படுத்திருப்பது போல் காட்சி ஓடுகிறது. மனக் கண்ணெல்லாம் வேண்டாம்... நிஜக்கண் கொண்டு பாருங்கள் என்று ஒவ்வொரு பக்கத்திலும் புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வரம் வேண்டும் பெண்கள் மட்டுமல்ல, அவர்களின் வீடுகளில் உள்ள ஆண்களும் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்.
நிலா சிற்றரசி