பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும்.
‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளின் ஆதார அம்சமாகவும் விளங்குகின்றன.
சாதி ஆணவக்கொலை, மாட்டுக்கறி அரசியல் தொடங்கி ‘மெட்ராஸ்’ திரைப்பட அலசல், பூமணியின் ‘அஞ்ஞாடி’ தொகுப்பின் விமர்சனம், ‘மாதொருபாகன்’ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் பற்றி, நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையும் நன்கு தெரிந்த பிரச்னையை, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.
சாதி ஆணவக் கொலைகளில் சாதி வீட்டுப் பெண்கள் (மேல்சாதிப் பெண்களை அப்படிக் குறிப்பிடுகிறார்) தலித் ஆண்களை விரும்புவதை, இறுக்கமான ஆணாதிக்க சாதியத் தளைகளில் இருந்து விடுதலை பெற எடுக்கும் முயற்சியாகச் சொல்கிறார்.
சாதி வீட்டுக்காரர்கள் அனைவரும், தமது வீட்டுப் பெண்களை மாமனுக்குக் கட்டிக் கொடுக்கத் தேவைப்படும் பிராய்லர் கோழிகளாக வளர்ப்பதாகவும் எல்லை தாண்டிச் சொல்கிறார். ராஜ் கவுதமன், நேர் பேச்சிலோ
கட்டுரையிலோ, கொஞ்சம் மேல் நிலை அடையும் தலித் ஆண்கள், தலித் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை என்று சொன்னதாக ஞாபகம்.
எல்லா தலித் ஆண்களுக்குமே அவர்களைவிட மேல்சாதிப் பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கு, சொந்த சாதிப் பெண்கள் மீதான தாழ்வான மனப்பான்மைதான் காரணமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்டது.
நிஜத்தில், காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகளும் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள் தான், சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். ஆதிக்கம் செலுத்த விரும்பும் தரப்பே அப்படிப் பார்க்கும்போது, அடங்க மறுக்கும் தரப்பும், அப்படிப் பார்ப்பதில் தவறில்லை தான்.
ஆனால், இருதரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில், இந்த சாதி கடந்த திருமணங்கள், சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாக வேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம். நூலாசிரியரின் தாத்தா – பாட்டி கூட அப்படியான சாதி கடந்த திருமணம் செய்து கொண்டவர்கள் தான்!
மாட்டுக்கறி பற்றிய கட்டுரையில் ஜே.என்.யு.,வில் நடத்திய கருத்தரங்கங்களில், மாட்டுக்கறியை ரகசியமாகச் சாப்பிட்டது பற்றிய குறிப்புகளைப் பார்க்கும்போது, இடதுசாரிக் கோட்டைகளில்கூட நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்க சாதி மதிப்பீடுகள், கொஞ்சம் நம்மை அதிர வைக்கின்றன.
அந்தக் கட்டுரையின் முடிவில், நூலாசிரியர் சொல்லியிருக்கும் விஷயமும் எழுப்பியிருக்கும் கேள்வியும் மிகவும் முக்கியமானது: (பெரும்பான்மையினரின்) சமையலறைகளில் தயாரிக்கப்படாத உணவுக்கு சமூக அங்கீகாரம் கிடையாது. கோவில்களில் பேசப்படாத பேச்சுகள் எவ்வளவு நாத்திக, பகுத்தறிவு மிகுந்ததாக இருந்தாலும் சமூகம் அதை வெறும் விடலைத்தனமாகச் சகித்து கொண்டு புறமொதுக்கி விடும்.
உயர் சாதி சார்ந்த மற்றும் பக்தி சார்ந்த மதிப்பீடுகளை அந்தக் குடும்பப் பெண்களிடம் கொடுத்திருப்பதே அந்த அமைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம். இதைப் புரிந்துகொள்ளாத பொதுவுடைமை சித்தாந்தங்கள், பகுத்தறிவுக் கொள்கைகள், தீவிர கலை இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்றுவிட்டனவா என்ற கேள்வி மிகவும் ஆழமானது. தீவிர மறுபரிசீலனையைத் தூண்டக்கூடியது.
‘எலைட்’ தலித்தின் குரலாக உருவாகி வந்திருக்கும் இந்தக் கட்டுரைகள், புதிய சிந்தனைகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவையாக இருக்கின்றன.
தொடர்புக்கு: writer.mahadevan@gmail.com
– பி.ஆர்.மகாதேவன்