சிவகங்கை சமஸ்தானத்தைச் சார்ந்த பிரமனூரில் பிறந்த வில்லியப்ப பிள்ளை, சிவகங்கைத் துரைசிங்க மஹாராஜாவை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, 1876ம் ஆண்டு, தாது வருஷத்தில் நிலவிய பஞ்சத்தைப் பாடு பொருளாக வைத்துப் பாடிய நூல் இது.
வில்லியப்பர் தமிழ்ப் புலமையோடு சோதிடம், மருத்துவம் மற்றும் உலகியல் சார்ந்த பல்துறை வித்தகராகவும் விளங்கினார். அவர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரும் ராமாயணம், பாரதம் முதலான இதிகாசங்களில் வரும் கிளைக் கதைகளையும் பல்வேறு புராணங்களில் இடம் பெறும் செய்திகளையுமே பாடுபொருளாகக் கொண்டு நூல்களைப் படைத்துக் கொண்டிருந்த போது, வில்லியப்பர், சமூக அக்கறையுடன், சமகால நிகழ்வையே பாடுபொருளாக்குகிறார்.
பஞ்சம் நிகழ்ந்து, 23 ஆண்டுகள் கழிந்து, 1899ல் இந்நூல் அரங்கேறுகிறது. நூலாசிரியருக்கும் பஞ்ச அனுபவம் உண்டு என்பதால், பின்னோக்கி பார்க்கும் போது, அன்று நடந்த சம்பவங்கள் அவருக்கு, நகைப்பை வரவழைக்கின்றன. அதனால், இந்நூல், தாது வருஷப் பஞ்சத்தால் மக்கள் பட்டபாட்டையும், அவர்கள் பல மோசடிகளுக்கு உள்ளானதையும் நகைச்சுவையுடன் வர்ணிக்கிறது.
சமகாலப் பாடுபொருளால் மட்டுமின்றி, பாத்திரங்களை உயிர்த்துடிப்புடன் படைத்து உலவவிடும் நாடகப் பாங்கு, நாட்டார் பேச்சு மொழி
களையும் கவித்துவத்தோடு கையாளும் நேர்த்த, சமகால நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் உள்வாங்கிக் கொண்டு, நகையுணர்வுடன் வெளிப்படுத்தும் கலைச் சிறப்பு போன்றவை இந்நூலுள் பொதிந்து கிடக்கும் வைரமணிகள். புராண, இதிகாசச் செய்திகள், தொல்மரபுக் கதைக் குறிப்புகள் இந்நூலிலும் உண்டு.
எனினும் பஞ்சத்தை முன்னிலைப்படுத்திப் பாடும் இவரது சமூகப் பொறுப்புணர்ச்சி, அவற்றைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. துயரமே பின்புலமாக அமைந்த பஞ்சம், வில்லியப்பரிடம் நகைமுகம்காட்டி களிநடம் புரிகிறது. காசுகடைக்காரர், சாமியார் வேடமிட்டோர், கோடாங்கி, வைத்தியன், சோதிடன், ஜவுளி கடைக்காரன், தட்டான், விலைமாதர், போலிப் புலவன் என அக்காலத்து எத்திப் பிழைத்த மாந்தர்கள் உள்ளடக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் நூல் முழுவதும் நகைச்சுவையாகவே பாடிச் செல்கின்றார்.
தமிழில் நகைச்சுவைக்கென்றே தோன்றிய நையாண்டி இலக்கியமாகத் திகழும் இந்நூல், உலா, தூது, மடல் முதலான மற்ற பிரபந்தங்களைப் போல் கலிவெண்பா யாப்பில், நாலாயிரம் அடிகளுக்கு மேல் எதுகை இடறாமலும் மோனை முறியாமலும் பாடப்
பெற்றுள்ளது.
பேரறிஞர் ச.வையாபுரிப் பிள்ளை, க.நா.சு., போன்ற ஒரு சில அறிஞர்களுக்கு மட்டுமே இந்நூல் பற்றி தெரிந்திருக்கிறது. இந்நூலை பதிப்பித்த முனைவர் ம.பெ.சீனிவாசன், 76 பக்கங்களில் விரிவான, ஆழமான, செறிவான பதிப்பு முன்னுரை அளித்துள்ளார்.
தம் வீட்டுப் புத்தகக் குவியலுக்குள் முடங்கிக் கிடந்த இந்நூலை மீண்டும் பதிப்பித்து, பழைய பதிப்புகளின் விவரங்களையும், அறிஞர் பெருமக்களின் ஆய்வுரைகளையும், சமகாலப் புலவர்கள் வழங்கிய சாற்றுக் கவிகளையும் பின் இணைப்பாக இணைத்து, இக்காலத் தலைமுறையினரும் எளிதில் படித்துணர ஏதுவாக கடின சந்திகளை பிரித்துக் காட்டி, நிறுத்தற் குறிகள் இட்டு, வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள ம.பெ.சீனிவாசனுக்கு தமிழுலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது.
– புலவர் சு.மதியழகன்