காதல் ஓர் உணர்வுக் கடத்தி. காதல் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஒரு அழகிய உணர்வு பரவுகிறது. யாருக்கு?! காதலிப்பவர்களுக்குத் தான். காதலிக்கிறவர்களுக்கும், காதலாகிக் கசிந்து உருகுகிறவர்களுக்கும் உட லின் திசுக்கள் எங்கும் காதல், காதல், காதல் தான். கொடுக்கல், வாங்கலில் சுவாரசியமானது காதல் தான்.
நூலாசிரியரின் இந்த கவிதைத் தொகுப்பு, காதல் விளக்கத்தின் இன்னுமொரு வரவு. உரையாடல்களின் போது நிகழும் கொஞ்சல்கள், ஊடல்கள், தவிப்புகள், ஏக்கங்கள் என, இத்தொகுப்பின் கவிதைகள், பல நிலைகளில் வாசிக்கிறவர்களுக்குள் உணர்வுத் ததும்பல்களை
ஏற்படுத்துகின்றன.
சங்க காலம் முதல் எழுதப்பட்டாலும் சலிக்காதவை காதல் கவிதை கள். நூலாசிரியரின் காதல் கவிதைகள் பெரும் சுவாரசியம். ஆணின் காதல் வர்ணனைகள் பெரும்பாலும் மிகை வர்ணனைகளாலும், அலங்காரப் பூச்சுகளாலும் நிறைந்திருக்கும். ஆனால் பெண்ணின் மன உணர்வுகள் அப்படியிருப்பதில்லை. நுட்பமான மன உணர்வுகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் என, நிராசைகளும், அதீத அன்பு, நெருக்கம், பிரிவுழலுதல் என வாழ்வின் சகல கூறுகளையும் அழகியலோடு தனது கவிதைகளாக ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
‘கதவு’ என்றொரு கவிதை...
குழந்தைகளுக்கு / கதவு ஒரு விளையாட்டுப் பொருள் / திறப்பதும் அறைவதும் / அவர்களுக்குப் / பிடித்தமான ஒன்று/ நீ / இழுத்து மூடியிருக்க வேண்டாம் / உன் மனக்கதவை/ அதற்கு முன் / திறந்து வைத்து / வேடிக்கை காட்டியிருக்க வேண்டாம்.
எளிமையான வாசிப்பில் உள்வாங்கிக் கொள்ளவும், ஆழ்ந்த வாசிப்பில் பன்முகப் புரிதலையும் தருபவையாக இருக்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள்.
இயல்பான வாழ்வியல் சார்ந்த காதலை உணர்ச்சிப் பெருக்குடன் வெளிப்படுத்தி இருக்கின்றன.
தொடர்புக்கு: pon.vasudevan@gmail.com
– பொன்.வாசுதேவன்