முகப்பு » வாழ்க்கை வரலாறு » பிம்பச்சிறை –

பிம்பச்சிறை – எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்

விலைரூ.225

ஆசிரியர் : பூ.கொ.சரவணன்

வெளியீடு: பிரக்ஞை

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் ஆங்கிலத்தில் எழுதும் ஓர் ஆய்வாளராகவும் இருந்தபோதிலும் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் ‘பிம்பச்சிறை’ நூல், எளிதில் அணுகக்கூடியதாக, ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது.

திரையிலும் அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர்., எப்படித் தன்னை ஒரு வலிமையான ஆளுமையாகக் கட்டமைத்துக் கொண்டார், எப்படி நீடித்த பெரும் வெற்றிகளைப் பெற்றார் என்பதைக் கவனமாக ஆராய்கிறது இந்நூல். ஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர்., இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்; அவருடைய ‘கட் அவுட்’ தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகு சதையில் பிணைத்துக்கொண்டு, 9 கி.மீ., இழுத்துச் சென்றார். சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.
எம்.ஜி.ஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். ‘ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்’ என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை. ‘தன் காதலியின் அருகில் இருக்கும்போதுகூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா’ என்கிறார் ஒரு ரசிகர். ‘எப்படிச் சொல்கிறீர்கள்’ என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்’ என்று பதிலளித்திருக்கிறார்.
எது நிஜம், எது நிழல் என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம், வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது என்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். இத்தனைக்கும் அவரது கட்சியிலும் அதிகார வர்க்கத்திலும் ஊழல் மிகுந்தவர்கள் பலர் இருந்தனர்.
இருந்தும், அவற்றை எம்.ஜி.ஆரின் ஊழலாக மக்கள் பார்க்கவில்லை. ‘அவர்களெல்லாம் ஊழல் செய்திருந்தாலும், நான் அப்படியில்லை’ என்று எம்.ஜி.ஆர்., சொன்னபோது அதை மக்கள் அப்படியே நம்பினார்கள். அவர் ஆட்சிக்கால ஊழல்களும் தவறுகளும் கூட எம்.ஜி.ஆர்., என்னும் தனிப்பட்ட புனித பிம்பத்தைக் கலைத்து விடவில்லை என்பது விசித்திரமே. அதனால் தான், எம்.ஜி.ஆருக்கு எதிராக தி.மு.க.,
எழுப்பிய குற்றச்சாட்டுகள் எவையும் மக்களிடம் இறுதிவரை எடுபடவேயில்லை.
பெரும் திரளான தீவிர பக்தர்களைப் பெற்றிருந்த போதிலும், எம்.ஜி.ஆரின் போதாமைகளை உணர்ந்திருந்தவர்களும் அப்போதே இருக்கத்தான் செய்தனர். அதற்கோர் உதாரணம், 1987, ஆகஸ்ட், 1ம் தேதி துக்ளக் இதழில் பதிவாகியுள்ள கை ரிக் ஷா ஓட்டும் ஓர் அ.தி.மு.க., அனுதாபியின் குரல். ‘நான் ஆட்சிக்கு வந்தால் சாராயக் கடையைத் திறக்கமாட்டேன்’ என்று அறிவித்துவிட்டு
ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரால், தன் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை என்பது அவரைச் சங்கடப்படுத்துகிறது.
அதே நேரம், எம்.ஜி.ஆரை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், தனது சங்கடத்தை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார், பாருங்கள்: ‘பொய் சொன்னாத் தான் காரியம் நடக்கும் என்பதால் தான் அவர் அப்படிச் சொன்னார்... பொய் வழக்குகள் கூட உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஜெயிக்குது. உண்மையான வழக்குகள் தோத்துப் போகுது. நிறைய பொய் சொல்றவங்க பெரிய ஆளாயிட்றாங்க. உண்மையைப் பேசுறவங்க குப்பை மேட்டுலேயே தான் இருக்காங்க.’
எம்.ஜி.ஆர்., என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட, கவர்ச்சிகரமான பிம்பம் மட்டுமே என்பது தெரிந்திருந்தும் ஏன் பலர் அவருடைய தீவிரமான ரசிகர்களாக இறுதிவரை இருக்கிறார்கள்? ஏன் அவருடைய பிழையான அரசியலையும் ஆதாரிக்கிறார்கள்? ஏன் அவருடைய தவறுகளைக் கூட முட்டுக்கொடுத்து நிறுத்துகிறார்கள்? ‘நியாயம் இல்லாமலும் வாழ்ந்துவிட முடியும்; நம்பிக்கையில்லாமல் மக்களால் ஒருபோதும் வாழ்ந்துவிட முடியாது’ என்னும் வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்பாமின் வாசகங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்தி விடையளிக்கிறார், எம்.எஸ்.எஸ்.பாண்டியன்.
‘எம்.ஜி.ஆரின் வெற்றிக் கதை என்பது மக்களின் தோல்விக் கதை என்பதைத் தவிர வேறில்லை’ என்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். மார்க்சிய சிந்தனையாளர் கிராம்சியின் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி விவாதிக்கும் தொடக்கப் பகுதி, சில கோட்பாடுகளை நிறுவி வாதிடும் இடங்கள் ஆகியவற்றை இன்னமும் எளிமைப்படுத்தி இருக்க முடியும் என்றாலும், பொதுவாக மொழிபெயர்ப்பு நன்றாகவே வந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., மட்டுமல்ல, அவரைப் போலவே பல பிம்பங்களை சினிமாவிலும் அரசியலிலும் உருவாக்கிவிட்டு, சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் இன்றைய தமிழக மக்களுக்கு இந்நூல், ஒரு சுத்தியலாகப் பயன்படும். பிம்பங்களை உடைக்காமல் புதிய அடித்தளத்தையோ லட்சியவாதக் கட்டுமானங்களையோ எழுப்ப முடியாது.
தொடர்புக்கு: marudhan@gmail.com

மருதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us