எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்துரைக்கிறது. 1920ல் திசையன்விளையில் பிறந்தார் வல்லிக்கண்ணன்.
உப்பள வேலையில் ஊர்கள் மாற்றி வாழ்ந்தாலும் இவர் உள்ளத்தில் ஊறிக்கொண்டு வந்ததோ தமிழிலக்கியம். வல்லிக்கண்ணனின் தளிரான இளமைக்காலம் முனிசிபல் நூலகம், தெருவோர மண்ணெண்ணெய் விளக்கு, கிராமபோன் பெட்டி, ஊமைப்படங்கள், சிற்றிதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் என்று வாழ்க்கைப் போராட்டங்களோடு கடந்த நிலையில், இந்திய சுதந்திர போராட்டங்களை நேரில் கண்டு பாரதியின் பாடல்களால் மனப்பக்குவம் பெற்று, இலக்கிய
தளத்திலும் ஆழமாய் தடம் பதித்து வளர்ந்தார். அவற்றின் நகர்வுகளை மிக மிக எளிய எழுத்து நடையில் அழகாகப் படம்பிடித்துப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்!
ஆரம்ப காலத்தில் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா. மவுனி போன்ற முன்னோடிகளின் கதைகள், இலக்கிய சர்ச்சைகள் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தாமும் சிறுகதைகள் எழுதத் துவங்கினார். தானே தனக்கென்று அழகாக வல்லிக்கண்ணன் என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டு, பல்வேறு இதழ்களில் எழுதியதோடு, கோரநாதன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளும் எழுதினார்.
காலப்போக்கில், ‘கலைமகள்’ இதழில் ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு., ந.சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரின் கதைகளிடையே, வல்லிக்கண்ணனின் கதைகளும் வெளியானபோது அவரது புகழ்க்கொடி இன்னும் உயரத்தில் பறந்தது. பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களும், வாசகர்களும் இவரை பிரபல மணிக்கொடி எழுத்தாளர்கள் வரிசையில் இணைத்தே நினைவு கூர்கின்றனர்.
இலக்கிய உலகில், ‘சிற்றிதழ்களின் நண்பன்’ என்றும், ‘நவீன இலக்கிய ரிஷி’ என்றும் போற்றப்பட்ட வல்லிக்கண்ணன், இலக்கியச் சிற்பி ஜெயகாந்தனால் ‘இயல்பில் இவர் பித்தகோரஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டவர். எழுத்தையே தொழிலாக்கிக் கொள்ள முனையும் எவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூல் இது.
-கவிஞர் பிரபாகர பாபு