பிரபலமான மனிதர்களின் சாதாரண விஷயங்கள் கூட பதிவாகி விடுகின்றன. சாதாரணமான மனிதர்களின் அபூர்வமான விஷயங்கள் கூடப் பதிவாவதில்லை. இது ஒரு சமூக முரண். இந்தச் சூழலில், கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
கவிஞரின் உணவுப் பழக்கம், மட்டுப்பட்ட மதுப் பழக்கம் எனப் பல சுவாரசியமான தகவல்கள் இருந்தாலும், இதில் கோபியின் பிரத்யேக நினைவுகள் தான் அதிகம். கடைசி மகனாக இருப்பதில் சில பிரச்னைகள் இருந்திருக்கின்றன கோபிக்கு. ‘வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அம்மனின் வேண்டுதலுக்குக் காணிக்கை என் தலைமுடியே. பெரும்பாலும் பெரியபாளையம் அம்மனுக்குத் தான் அம்மா வேண்டிக்கொள்வார்கள். கூழ் ஊற்றும் அந்த நேரம், பாத்திரங்கள், உட்கார ஜமுக்காளம், எரிக்க விறகு, அரிசி, வெல்லம் என்று காரை அடைத்துக் கொண்டு செல்வோம்.
எனக்கு மூன்று வயதிருந்தபோது மொட்டையடித்து விட்டு, கூழ் வைத்து, சாமிக்குப் படைத்து விட்டு எல்லோரும் கிளம்பிவிட்டார்கள், என்னைக் கோவிலில் மறந்து விட்டு விட்டு. போலீஸ்காரர் ஒருவர் என்னைக் கண்டெடுத்து என் பெயரைக் கேட்க ‘கண்ணதாசன்’ என்பதைத் தெளிவாகச் சொன்னேனாம். ஸ்டேஷனில் உட்காரவைத்து ரொட்டி, பிஸ்கட் தந்து அம்மா திரும்பி வரும்வரை அழாமல் பார்த்துக் கொண்டார்கள்.
இது எப்படியோ அப்பாவின் காதுக்குப் போக, இனி என்னை பெரியபாளையத்துக்கு அழைத்துப் போக வேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்.
அம்மாவும் அப்படியே செய்தார். அடுத்த வேண்டுதல் எல்லாமே திருப்பதி ஏழுமலையானுக்கு’ (பக். 64, 65). சுஜாவோடு சேர்ந்த சூட்சுமத்தை கோபி, தனி
புத்தகமாகவே எழுதியிருக்கலாம். மானே, தேனே இல்லாத காதல் அது. கோபியின் எழுத்தில், இருக்கும் உண்மையும் இளகும் தன்மையும் சேர்ந்தே
வெளிப்படுகின்றன.
சுப்பு