இது ஒரு முழுமையான பயண நூல். ஜப்பானுக்கு செல்ல விசா வாங்குவது முதல், பணப் பரிமாற்றம், தங்கும் இடம் மற்றும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் என, அத்தனையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் என்னென்ன என்று கூறுவதோடு, தொழில்நுட்ப அதிசயமாக உள்ள கடற்பாலம், கடல் மேல் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் போன்றவற்றை, புகைப்படங்களுடன் கொடுத்திருப்பது சிறப்பு.
ஜப்பானிய மக்களின் கலை, பண்பாடு மற்றும் திருவிழாக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது. நமக்கும், ஜப்பானியர்களுக்கும் பல விஷயங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை விவரிக்கிறார். பிற்சேர்க்கையாக, இந்திய – ஜப்பானிய தொழில் உறவு பற்றி, இந்தோ – ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமி பேட்டி, முனைவர் பொற்கோ எழுதிய, ‘திராவிடமும், ஜப்பானியமும்’ என்ற ஆய்வு கட்டுரையின் தொகுப்பு, ஜப்பானில் 10 ஆண்டுகள் வசித்து, தற்சமயம், மாமல்லபுரத்தில் வழிகாட்டியாக பணிபுரியும் ரவி என்பவர், ஜப்பானிய திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் பற்றி கூறியதன் தொகுப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஆதித்யா