திருப்புகழ், முருகப் பெருமான் மீது பாடப்பட்ட கவியானாலும், அதில், கணபதி, சிவன், அம்பிகை, சூரியன், திருமால் ஆகிய எல்லா கடவுளுக்கும் இடமுண்டு. ‘முத்தைத்தரு’ என்ற முதல் பாடலிலேயே, ராமன் மற்றும் கண்ணனை, அருணகிரிநாதர் போற்றுவதை, நூலாசிரியர் மிக அழகாக விளக்குகிறார்.
பாற்கடல் வாசம், பாம்பணை நேசம், ராமனின் வீரம், கண்ணனின் கருணை, மகாலட்சுமியின் மாண்பு, கஜேந்திரனுக்கு அருளியது, அனுமனது வீரம், ஆழ்வாரின் சொல் கேட்டு பெருமாள் அவர் பின் சென்றது போன்ற திருமாலின் பெருமைகளை, திருப்புகழிலிருந்து தனியே எடுத்து,
நயமுடன் எழுதியுள்ளார்.
‘எந்தை வருக, ரகுநாயக வருக’ எனும் கோசலை ராமனை அழைக்கும் திருப்புகழ் பக்திரசம்மிக்கது. இதை (பக்.56) விவரித்துள்ளார். சீதையை அனுமன் தேடுவதை, ‘உடுக்கத் துகில் வேணும்’ பாடலால் விளக்குகிறார். ‘இலங்கையில் இலங்கிய இலங்களில் இலங்கருள் இலங்கணும் இலங்குக’ என, அனுமன் தீ வைத்த திருப்புகழ் மனதைத் தொடுகிறது. திருப்புகழ் பாற்கடலைக் கடைந்து எடுத்த நெய்யாக, திருமாலைப் போற்றும் நல்ல நூல்.
முனைவர் மா.கி.ரமணன்