‘தினமணி’ கதிரில் தொடராக வெளிவந்த லா.ச.ரா.வின், 48 ஆண்டு அனுபவங்கள் கரைபுரண்டு ஓடும் ‘சிந்தா நதி’ எனும் நதிமூலத்தில் இருந்து தோன்றிய ஆங்கிலப் பெயர்ப்பு இந்நூல். போலி கவுரவ மதகுகள் இல்லாமல் பிரவாகமாகப் பாய்ந்தோடும் ராமாமிருத நதிக்கு, ஆங்கில வண்ணம் தீட்டி - ஒரு மொழிபெயர்ப்பாகத் தோன்றாதபடி, மூலத்தின் மெருகு குறையாமல் தவழ விட்டிருக்கிறார், மொழிபெயர்ப்பு ஆசிரியர் பட்டு எம்.பூபதி.
வாழ்க்கை எனும் இந்த வினோத நதியோட்டத்தில், தன் பல அனுபவங்களையும் பொதுவில் வைத்து, சுயத்தின் முழு தரிசனம் தந்திருக்கிறார் லா.ச.ரா., வீட்டுச் செலவுக்கு கணக்கு கேட்டதும் அவமானத்தால் குற்றுயிராய் விழும் அம்மா (பக்.17); உறுத்தி வருத்தும் கண் புரைக்கு எங்கிருந்தோ வந்து மருத்துவ உதவி செய்துவிட்டு மறைந்துவிடும் வெங்கடராமன் (பக்.20); தொலைந்த மோதிரத்தைத் தேடி வேலைக்காரியைச் சந்தேகப்படுவது (பக்.32); பூனை-நாய் தன்மானப் போர் (பக்.60) என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
திகிலோடு தொடங்கும் ‘தி ரோப்’ (பக்.120), சற்று காமம் துழாவிப் பார்க்கும் ‘தி வுமன்’ (பக்.124), வங்கிக்கடனால் ஆணவமாகிவிடும் ‘பிள்ளைவாள்’ (பக்.133), குற்றங்களை அலசும் ‘ட்ரீசன்’ (பக்.154), சொல் பற்றிய அலசலாய் வரும் ‘எ மொமெண்ட் ஆப் ஈட்டர்னிட்டி’ (பக்.222) ஆகியவை முத்திரைப் பதிக்கின்றன. தவிர்க்கவே கூடாதது லா.ச.ரா. சொல்லும் வழிகாட்டு நெறிகள் (பக்.54). செய்தாக வேண்டியதைச் செய்யாமல் விட்டதாலும், தவிர்க்க வேண்டியதை வீம்பாகச் செய்ததாலும் வருத்தும் மனப் பிரளயங்கள்; தன்னை எவ்வாறு முறைப்படுத்தினாலும், தானே பலருக்கு வழிகாட்டினாலும், தான் செய்த தவறில் இருந்தே தப்பிக்க முடியாதபடி நெருக்கடிகள். பிறரது வாழ்க்கையை இயக்குவது சுலபம் என்பதாக லா.ச.ரா. முன்வைக்கும் கருத்துக்கள் பலவும், நூலைப் படித்து முடித்த பிறகும் தலைமேல் வட்டமிடுகின்றன.
வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களையும் பொய்யில்லாமல் எழுதினாலே ஒரு சிந்தா நதி கிடைத்துவிடும் என்று நேர்த்தியாக உணர்த்தி இருக்கிறார் லா.ச.ரா.,
கவிஞர் பிரபாகரபாபு