ஒருமுறை சயாம் நாட்டுக்குச் சென்ற நம் தேசியகவி ரவீந்திரநாத் தாகூர், அந்த மண்ணைத் தொட்ட தும் காதலுக்கு நிகர்த்த ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன்’. ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இந்த நூலிலே வரும் தொழிலாளக் கொத்தடிமைகள் சயாமுக்கு வைத்த பெயர், ‘சாவூர்’ என்பதாகும்.
மரண ரயில் பாதை. ரயிலுக்கு பயணப் பாதை தான் உண்டு. மரணப் பாதை இருக்குமா? இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் பேசுகிறது இந்த நூல். இரண்டு தலைமுறைக் காலம் கடந்த இந்த நிலையில் சயாம் – பர்மா எல்லாம் பெயர் மாறிவிட்டன. சயாம், தாய்லாந்து ஆகிவிட்டது. பர்மா, மியான்மர் ஆகிவிட்டது. சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் கட்டப்பட்ட பாலங்கள், நிலையங்களின் பெயர்கள் சிலவும் மாறிவிட்டன.
இரண்டாம் உலகப் போரை ஒட்டி, அச்சு நாடுகளுடன் சேர்ந்து, 1940களில் பெற்ற வெற்றி, ஜப்பானை கர்வத்தின் உச்சியில் ஏற்றியது. அது, ‘ஆசியா ஆசியருக்கே!’ என முழக்கமிட்டது. அதன் உட்கிடக்கை, ‘ஆசியா ஜப்பானியருக்கே’ என்பது தான்.
தளவாடங்கள் கொண்டு சேர்க்க தண்டவாளம் தேவைப்பட்ட யோசனை யின் அன்னியில் உருவானதுதான் சயாம்- – பர்மா ரயில்பாதைத் திட்டம்.
ஆட்களின் தேவை அதிகம் என்பதை உணர்ந்த ஜப்பான், மலேஷியாவில் பிரிட்டிஷார் வசமிருந்த ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழர்களையும், மலேயா, சீனா, சிங்கப்பூர், பர்மா மக்கள் என அனைத்துத் தரப்பினரையும், சம்பள ஆசை காட்டி இழுத்தது.
வரலாற்றுப் பதிவுகளின் குறைபாடு காரணமாக தமிழர்களது அவலநிலை மட்டும் போதுமான அளவு பதிவு பெறவில்லை. செந்நீரும், கண்ணீரும், வியர்வையும், சாவுக் கவிச்சையும் நிறைந்த இந்தப் பதிவை ஆராய்ச்சி நோக்குடன், நூலாசிரியர் எழுதியிருக்கிறார். நானூற்று முப்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு, ஐந்து ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்ட பணி, ஒன்றரை ஆண்டுகளில் முடிந்தது. இது தொழில்நுட்பத்தின் சாதனை அல்ல. மரணத்தை விலை கொடுத்து ஈட்டிய பாதை. தண்டவாளங்களுக்குக் கீழே போடப்படும் ஸ்லீப்பர் கட்டைகள் பர்மாவில் தேக்குகளாகக் கிடைத்தன. அதைச் சுமந்த தொழிலாளர்களுக்கே சிலுவைப் பாடுகள். கவித்துவ உவமை என்னவென்றால் அந்த ஸ்லீப்பர் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு பிணத்தின் அடையாளம்.
மலேரியா, காலரா, குடற்புண், தோல் நோய் போன்றவற்றுக்குப் பலர் ஆட்பட்டனர். பலர் உடற்காயங்களுக்கும் வெட்டுக் காயங்களுக்கும் உட்பட்டனர், பாம்புக் கடிகள், தேள் கடிகள், ஜப்பானியர்களின் தண்டனை முறைமைகள் என இந்த நூலை படிக்கப் படிக்க கண்கள் உப்புக் குளமாகின்றன.
ஜப்பான் தனது உலகப் போர்த் தோல்விக்குப் பின் – குறிப்பாக ‘சின்னப் பையன், கொழுத்த ஆள் என அழைக்கப்பட்ட இரண்டு அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின் – தனது நிலையை ஒப்புக்கொண்டு, போர்க்குற்றமாக ஒப்புக்கொண்டு, ரயில்பாதை ஊழியர்களுக்கு அது தந்த இழப்பீடு, முறையாக தமிழர்களுக்கு வந்து சேரவில்லை என்பதும் நூலின் ஆதங்கமாக இருக்கிறது.
மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்பு என்னும் நூல் தலைப்பையே வடிவ ஒழுங்கு கருதி ‘உயிர்ப்பு’ என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது உண்மையின் துடிப்பு; துயரத்தின் துடிப்பு.
‘சித்திரச் சோலைகளே/ உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே/ முன்னம் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே
என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது
தொடர்புக்கு: sivakannivadi@gmail.com
– க.சீ.சிவகுமார்