ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து, 100 மைல்கள் தூரத்தில் உள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுமி மலாலா. அவர் கனவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று படிப்பது மட்டும் தான். இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த மலாலாவிற்கு, அவரது 11 வயதில் வாசித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின், ‘காலம்: ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற நூல் தான், தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் விவகாரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கிஸிடினா லாம்ப் உடன் இணைந்து, மலாலா ஆங்கிலத்தில் எழுதிய சுயசரிதை, ‘ஐ ஆம் மலாலா’. தற்போது தமிழில் வெளிவந்து உள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கின் சமூக வாழ்க்கை, பாகிஸ்தான் அரசியல், வரலாறு இவற்றை ஒரு பள்ளிச் சிறுமியின் பார்வையில் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மலாலாவின் கதை என்பதை விட, அவர் அப்பாவின் கதை என்று தான் சொல்ல வேண்டும். கல்வி மீது, குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்ட அவர்தான், உலகம் முழுவதிலும் உள்ள கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் போராளியாக மலாலா உருவானதற்கு காரணம்.
ஒரு முஸ்லிம் மத போதக ரின் மகனாகப் பிறந்த மலாலாவின் அப்பா, ஜியாவுதீன் யூசுப்ஸையிலிருந்து தான் புத்தகம் துவங்குகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே கல்வி மீது ஆர்வம் கொண்டிருந்த யூசுப்ஸையின் லட்சியம், ஸ்வாட் பள்ளத்தாக்கில், தரமான ஆங்கிலப் பள்ளியை துவக்க வேண்டும் என்பது தான். பாகிஸ்தான் பற்றியும் தலிபான்களின் ஆக்கிரமிப்பு குறித்தும் மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் வலிமை பற்றியும் உணர்ந்து கொள்ள, இந்த நூலை வாசிக்க வேண்டும். நூலில், மலாலாவின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
பத்மஜா நாராயணனின் மொழிபெயர்ப்பு, இயல்பாக உள்ளது. நம் எதிரில் மலாலா உட்கார்ந்து பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது பத்மஜாவின் மொழிவளம்.
கீதா