முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.
வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்கிறார் கலாம்
1. வாழ்வில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்; சிறிய லட்சியம் குற்றமாகும்
2. அறிவைத் தேடித்தேடிப் பெறல் வேண்டும்
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்
4. விடா முயற்சி வேண்டும். அதாவது, தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும்.
இந்த நான்கு குணங்களும் இருந்தால், உங்கள் கனவு நனவாகும். உறக்கத்திலே வருவதல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு என்கிறார் கலாம்.
காந்தியின் 9வது வயதில், அவர் தாயார் அவரிடம், ‘மகனே! உன் வாழ்வில் துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி அவரைத் துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து, முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாகப் பிறந்ததன் பயன் உன்னை முற்றிலும் வந்தடையும்’ என்றார். இந்த அறிவுரையை, கலாம் எல்லா கூட்டங்களிலும் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு வரையே படித்த தனது கார் ஓட்டுனர் கதிரேசன் என்பவரை, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் மேலும் படிக்கச் செய்தார் கலாம். அவர் உயர்கல்வி முடித்து இன்று அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
அதேபோல், ஆந்திர மலைவாழ் ஜாதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்னும் பார்வையற்ற மாணவன், கலாமின் நான்கு அறிவுரைகளைப் பின்பற்றி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், 95 மற்றும் 98 சதவீத மதிப்பெண் பெற்றார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் படிக்க விரும்பினார். ஆனால், அங்கு பார்வையற்றோருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அந்த நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வில், அனைத்துலக மாணவர்களோடு பங்கேற்று, நான்காம் இடத்தைப் பெற்று, அந்த நிறுவனத்திலும் இடம் பெற்றார்.
தண்ணீரை உள்வாங்கும் விதை, வேர்விட்டு செழித்து விருட்சமாவது போல், கலாமின் வழிகாட்டுதல்களை உள்வாங்கும் மாணவர்கள் மனம், நிச்சயம் செழித்து மேலோங்கும்.
புலவர் சு.மதியழகன்