கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 1,200 சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர்கள், மாத நாவல்கள் என்று பன்முகத் தன்மையோடு எழுதி வருபவர் லட்சுமி ராஜரத்னம். அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை, ஒரு சிலர்தான் உணர்வூட்டி கருவாக்கி, கற்பனை கலந்து கதையாக உருப்பெற்றெடுக்கிறார்கள். அந்த வகையில் லட்சுமி ராஜரத்னம் படைத்திருக்கும் ஒரு நெடுங்கதை தான் இந்த பாட்டுடைத் தலைவி.
ரவி, ராதா, நிர்மலா மற்றும் அவர்களைச் சார்ந்த மனிதர்களின் வாயிலாக வாழ்க்கைச் சம்பவங்களை விவரித்து, நிர்மலா மீது ரவி கொள்ளும் விருப்பமாகப் பயணித்து, சங்கீதத்தையே உயர்வாய் எண்ணி, வாழ்வை அர்ப்பணிக்கும் நிர்மலாவின் போக்காய் மாறி, ராதாவின் இயல்புக்கு மீறிய, மனதிற்கு ஒவ்வாத நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி… இறுதியில், லட்சியக்கன்னி நிர்மலாவின் தியாக வாழ்வு ஜீவராகமாக ஒலித்து நிறைகிறது. மொத்தத்தில் படிப்பவரது இதய மேடையில் இசையமுதம் பொழிகிறாள், இந்த பாட்டுடைத் தலைவி.
ஸ்ரீநிவாஸ் பிரபு