சாமானியர்களுக்குள் எழும் உணர்ச்சிகளை எல்லாம், அவர்களின் பக்கம் நின்று அழுத்தமாய் சொல்லியிருக்கிறது, இந்த நூல். ‘இவரின் துணிச்சலும், போர்க்குணமும் தான், இவரை நக்கீரன் ஏந்தியதற்கு காரணம்!’ எனும், முதற்பக்கத்தோடு துவங்குகிறது இந்த நூல்; ஆம், நக்கீரன் இதழில், குஷ்பு எழுதிய தொடர் தான், இந்த நூல். 20 தலைப்புகள் இதில் உள்ளன.
நிறவெறியின் வால் பிடித்தே பயணிக்கும் ஒரு கூட்டத்தையும், படையெடுத்து நிற்கும் உலக பிரச்னைகள் அனைத்தையும் எளிதாய் கடந்துவிட்டு, ‘நாங்கள் கலாசார காவலர்கள்’ எனும் போர்வைக்குள் இருந்து, லாபம் எதிர்பார்த்து கிளம்பியிருக்கும் கூட்டங்களையும், சாமானியர்களுக்கு எதிராய் கிளம்பியிருக்கும் ஒவ்வொரு படையையும், ஆரத்தழுவி அழுத்தமாய் காயப்படுத்தியிருக்கின்றன, இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும்!
‘குழந்தைகளுக்கு ஓட்டுரிமை இருந்திருந்தால், ஒருவேளை பள்ளிக் கல்வியை பற்றி அக்கறை செலுத்தியிருப்பார்கள்’ என, மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு கொட்டு. (பக்.29). படிக்க வேண்டிய நூல்.
எழில்