நாகரிகத்தின் பெயரால், பிரம்மாண்டமான குப்பைத் தொட்டியாக, இந்நாட்டை மாற்றி வைத்திருக்கிறோம். இன்றைய இந்தியாவிற்கான தேவை, சுத்தம் என்பதை, மிக ஆழமாக விவரிக்கும் நூல். ‘தினகரன்’ வசந்தம் இணைப்பிதழில், தொடராக வெளிவந்து, பலரது பாராட்டைப் பெற்ற கட்டுரைகள், புத்தகமாக வெளிவந்துள்ளன. மொத்தம், 35 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும், நமக்கு அதிர்ச்சியையும், அபாயத்தையும் தருகிறது.
குப்பை, பிளாஸ்டிக் மற்றும் மின்கழிவுகள், குட்கா முதல் பிளக்ஸ் பேனர் வரை பல்வேறு காரணிகள், இந்நாட்டை எப்படியெல்லாம் ஆபத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றன என்பதை, ஆதராங்களுடனும், புள்ளிவிபரங்களுடனும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார். ‘பிரதமரே, மற்றவர்களோடு இணைந்து துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, தெருவை சுத்தம் செய்ய இறங்கியிருப்பது நல்ல மாற்றம்; ஆனால், இந்தியாவை சுத்தப்படுத்த நினைக்கிறவர்கள், தெருவை அல்ல, மக்களின் மனங்களைத் தான் முதலில் சுத்தப்படுத்த வேண்டும்’ ‘பொது இடம் என்பது, சாதிமதப் பாகுபாடுகளின்றி எல்லாருக்கும் பொதுவானது என்கிற எண்ணம், எல்லாருக்கும் வரும் வரை, நாடு சுத்தம் அடைவதும், அந்த சுத்தத்தை தொடர்ந்து பராமரிப்பதும் கொஞ்சம் சிரமம் தான்’ என, உண்மையை நறுக்கு தெறித்தாற்போல கூறுகிறார்.
‘ஒரே ஒரு ஸ்க்ரூ கூட பயன்படுத்தாமல், 26,500 டன் இரும்பு கொண்டு அமைக்கப்பட்ட, கோல்கட்டா ஹவுரா பாலத்தை, குட்கா போட்டு துப்பியே, மனிதர்கள் தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்’ என, அதிர்ச்சியூட்டுகிறார் ஆசிரியர்.
தூய்மையில் முன்னோடி கிராமங்களாக இருக்கும், திண்டுக்கல் அருகேயுள்ள என்.பஞ்சம்பட்டி மற்றும் சென்னை அருகேயுள்ள முடிச்சூரை அறிமுகப் படுத்துகிறார். நீரை எப்படி பயன்படுத்துவது, வீட்டை எவ்வாறு சுத்தப்படுத்துவது, சுற்றுலா செல்லும்போது நடந்து கொள்ள வேண்டிய விதம் போன்றவற்றையும் நூலாசிரியர் விளக்கி உள்ளார்.
சி.சுரேஷ்