முகப்பு » பொது » இலங்கை வானொலியின்

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (பாகம் 1)

விலைரூ.400

ஆசிரியர் : தம்பி ஐயா தேவதாஸ்

வெளியீடு: வித்யாபீடம் பப்ளிகேஷன்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழகத்தில் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பாளர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஒப்பான புகழுடன் விளங்கிய காலம் ஒன்றுண்டு.
இன்றைக்கும் கூட மயில்வாகணன், கே.எஸ்.ராஜா போன்ற பெயர்கள், வானொலி நேயர்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இலங்கை வானொலியின் அப்துல் ஹமீது பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர் எங்கள் வீட்டுப் பிள்ளை போல இளந்தலைமுறையினரும் அறிந்தவர்.
கால அட்டவணையைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், இன்னும் பல பெயர்கள் முதியவர்களின் நெஞ்சக் கிடக்கையிலிருந்து வெளிவரும்.
சோ.சிவபாதசுந்தரம், சுந்தரலிங்கம் போன்றவர்கள், தங்கள் பிற்காலத்தில் தமிழகத்தைத் தாயகமாக்கிக் கொண்டவர்கள். சிவபாதசுந்தரம், ‘ஒலிபரப்புக் கலை’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி சென்னையில் வெளியிட்டார்.
பொதுவாக எந்த ஒரு புத்தகத்துக்கும் முன்னுரை எழுதச் சம்மதிக்காத ராஜாஜி, இவரது புத்தகத்துக்கு எழுதிக் கொடுத்தார். தன் அறிமுக உரையின் இறுதியில் அவர், ‘இந்தப் புத்தகத்துக்கு, ‘வானொலி வாத்தியார்’ என்றே பெயர் வைத்திருக்கலாம்’ என, எழுதியிருந்தார். அந்த அளவுக்கு வானொலி
ஒலிபரப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை அந்த நூல் தன்னுள் கொண்டிருந்தது.
தமிழ்த் திரைப்பட பாடல்களின் களஞ்சியமாக இலங்கை வானொலி திகழ்ந்தது. அங்கு கிடைக்காத பாடல்களே இல்லை. இதனால் இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பாளர்கள், தமிழ்த் திரையுலகம் பற்றி தமிழக மக்கள் அறிந்தவற்றை விடக் கூடுதலான தகவல்களை அறிந்திருந்தனர்; மட்டுமல்ல, அவற்றை நிகழ்ச்சிகளினூடாக நேயர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதனால், தமிழக நேயர்களுக்கு, இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்கள் மீது ஒரு
வாஞ்சை ஏற்பட்டு இருந்தது.
அத்தகைய இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் பற்றி, அவர்களது வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் பணியாற்றிய விதம் என்பவற்றையெல்லாம் தொகுத்து இந்த நூல் வெளியாகி உள்ளது. நூலாசிரியர், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், எழுத்தாளர், இலங்கைத்
தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் என, பன்முக ஆளுமை கொண்டவர்.
இந்த நூலில், 50 ஒலிபரப்பாளர்கள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஒலிபரப்பாளர்களின் படங்களுடன், நூலாசிரியர் தமது சேமிப்பிலிருந்த சில அரிய புகைப்படங்களையும் நூலில் சேர்த்துள்ளார். இந்தப் படங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வெளியிடப்பட்ட இந்த நூல், இப்போது குறிப்பிட்ட பிரதிகள் மட்டும் தமிழகத்திலும் கிடைக்கிறது.
தொடர்புக்கு: umakanthan@gmail.com

எஸ்.எஸ்.உமாகாந்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us